மக்களவை தேர்தல் தோல்வி எதிரொலி தமிழக பாஜ நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்: மோடி பதவியேற்புக்கு பின் நடவடிக்கை பாய்கிறது

சென்னை: மக்களவை தேர்தல் தோல்வி எதிரொலியாக தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி பதவியேற்புக்கு பின் நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது. மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜ இடம் பெற்றிருந்தது. பாஜவிற்கு தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் தூத்துக்குடியில் தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கன்னியாகுமரியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிவகங்கையில் பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா, கோவையில் மூத்த பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிட்டனர். ஆனால் இவர்கள் யாராலும் வெற்றி பெற முடியவில்லை. 5 தொகுதியில் போட்டியிட்ட பாஜ தோல்வியை தான் சந்திக்க நேரிட்டது. இந்தியா முழுவதும் பாஜ அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஆனால், தமிழகத்தில் போட்டியிட்ட 5 தொகுதியில் பாஜ வெற்றி பெற முடியாமல் போனது அக்கட்சி தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ஆளுங்கட்சியான அதிமுகவுடன் கூட்டணி அமைத்தே இந்த நிலையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள பாஜ தலைவர்கள் டி.வி., பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதில் தான் குறியாக உள்ளனர்.  கட்சியை வளர்க்கவும், மக்களிடம் நம்பிக்கையை பெறவும், மத்திய பாஜவின் திட்டங்களை கொண்டு செல்லவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாஜ மேலிடம் கருதுகிறது. ஒவ்வொரு முறையும் கட்சியில் இவ்வளவு உறுப்பினர்களை சேர்த்துள்ளோம், அவ்வளவு உறுப்பினர்களை சேர்த்துள்ளோம் என்று கணக்கு மட்டும் காட்டுகிறீர்கள். அப்படி சேர்த்து இருந்தால் அந்த வாக்குகள் எங்கே போனது என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை கட்சி தலைமை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழக பாஜவில் அதிரடி மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழக பாஜ தலைவரை மாற்றவும் கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. இப்போது கட்சி மேலிடம் மத்தியில் புதிய அரசை அமைப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. வருகிற 30ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை பொறுப்பேற்கும் என்று கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கும் முக்கிய பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கும் பட்சத்தில், தேசிய தலைவராக புதிதாக ஒருவரை நியமிக்கவும் கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. புதிய தேசிய தலைவர் வரும் பட்சத்தில் தேர்தலில் செல்வாக்கு குறைந்த மாநிலங்களின் தலைவர்கள் மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்படி மாற்றம் செய்யப்படும் பட்சத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் மாற்றப்படுவார் என்றும் கூறப்படுகிறது. புதிய தலைவர் பட்டியலில் நிறைய பேரின் பெயர்கள் அடிப்பட்டு வருகிறது.

Related Stories: