டிஜிட்டல் மயமாகியும் கண்டுகொள்ளாத மாநில அரசு ஆன்லைனில் வராத தகவல் அறியும் உரிமை சட்டம்

நாகர்கோவில்: மாநில அரசின் பெரும்பாலான துறைகள் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான மனுக்களை ஆன்லைன் மூலம் பெற்று பரிசீலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை, ஊழலை கட்டுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் கடந்த 2005ம் ஆண்டு மத்திய அரசால் தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) கொண்டுவரப்பட்டது. அரசு அலுவலகங்கள், அரசு நிறுவனங்களில் உள்ள பதிவேடு, ஆவணம், அறிக்கை, மெமோ, சுற்றறிக்கை போன்ற ஏதேனும் வடிவில் உள்ள தகவல் அல்லது விபரம் போன்றவற்றை ஒருவர் பெற விரும்பினால் இந்த சட்டத்தின் கீழ் தகவலாக பெறலாம். இதற்கு நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்ப படிவம் ஏதும் இல்லை, மனுவுடன் ₹10 கட்டணம் செலுத்த வேண்டும். மனுவில் கோர்ட் பீஸ் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்புவது எளிதான முறையாக இருந்து வருகிறது. மனுவின் நகல் எடுத்து வைத்திருப்பது நல்லது. ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால் அதற்கான சான்று இணைக்க வேண்டும். நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ மனு அனுப்பும் நடைமுறை இருந்து வருகிறது. ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்புவது மனு சென்றடைந்ததை உறுதி செய்யும். பதில் கிடைக்காது, திருப்தியளிக்காத பதிலுக்கு முதல் மற்றும் இரண்டாம் மேல் முறையீடுகளுக்கு கட்டணம் இல்லை.

வயதான நபர்கள் மற்றும் பெண்கள் தகவல் அறியும் உரிமை மாவட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று மனு செய்வதில் சில சிரமங்கள் இருப்பதாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் மனுவையும் கட்டணத்தையும் ‘ஆன்லைன்’ மூலம் சமர்ப்பிக்கும் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த சேவையை பெற விரும்பும் பொதுமக்கள், பாரத ஸ்டேட் வங்கி அல்லது அதன் குழுமத்தை சேர்ந்த பிற வங்கி கணக்கின் வாயிலாக ₹10ஐ ஆன்லைன் மூலம் செலுத்தி, தாங்கள் அறிய விரும்பும் தகவலுக்கான மனுவை சமர்ப்பிக்கலாம். இதேபோல் இதர கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் மூலமாகவும் மனுவுக்கான கட்டணத்தை வீட்டில் இருந்தே இன்டர்நெட் மூலமாக செலுத்தி தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். கடந்த 2013ம் ஆண்டு மத்திய அரசு 2600 துறைகளுக்கு இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களிலும் விபரங்களை ஆன்லைனில் பெறும் வசதி மாநில அரசால் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் ஆன்லைன் நடைமுறை இதுவரை அமல்படுத்தப்படவில்லை. 30 நாட்களுக்கு தகவல் கிடைக்காவிடில் மேல்முறையீடு செய்து, அவ்வாறு மேல்முறையீடு அளிக்கும்போது பதில் திருப்தி அளிக்கவில்லையெனில் தகவல் ஆணையத்திற்கு 2 வது மேல்முறையீடு செய்யலாம். இதில் தாமதம் ஏற்படுவதை தடுக்க 2 வது மேல்முறையீட்டிற்கு ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு செய்ய ஆன்லைன் வசதி ஏற்படுத்தப்படாதது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் கொண்டுவரப்பட்டு 14 ஆண்டுகளாகியும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

தமிழகத்தில் வருவாய் கிராம அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் உட்பட பெரும்பாலான அரசு துறை அலுவலகங்கள் ஆன்லைன் மயமாகிவிட்டன. இ-சேவை மையங்கள் வாயிலாக பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணிகளும் தொடங்கிவிட்டன. வங்கி கட்டணங்களை செல்போன் வாயிலாக, இணையதள வங்கி சேவையின் வாயிலாக செலுத்துகின்றவர்களும் அதிகரித்துள்ளனர். கிரெடிட் கார்டு, டெபிட்கார்டுகள் வாயிலாகவும் கட்டணம் செலுத்தி ஆன்லைனில் தகவல்கள் பெற இயலும். ஆனால் அதற்கான வசதியை மாநில அரசும், மாநில தகவல் ஆணையமும் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள் கூறுகையில், ‘மாநில அளவில் டிஜிட்டல் மயம் அதிகரித்த போதிலும் வெள்ளை பேப்பரில் மனு எழுதி அல்லது டைப் செய்து, கோர்ட் பீஸ் ஸ்டாம்ப் ஒட்டி, அதனை தபால் நிலையத்தில் சென்று பதிவு தபால் மூலம் விண்ணப்பித்து, அதற்கான அத்தாட்சி கடிதத்தை திரும்ப பெற்று, மாத கணக்கில் காத்திருந்து, தகவல் சரியில்லை என்று 30 நாட்களுக்கு பிறகு மேல்முறையீடு செய்து, அதற்கு 30 நாட்களுக்கு பிறகு 2 வது மேல்முறையீடு செய்து என்று இப்போது உள்ள நடைமுறையில் தகவல் அளிக்க அதிகாரிகளால் தாமதம் செய்துகொள்ளலாம். ஆனால் ஆன்லைனில் அவ்வாறு செய்ய இயலாது. பதிவு செய்துவிட்டால் அடுத்த நொடியே பொதுதகவல் அலுவலருக்கு விண்ணப்பம் கிடைத்துவிடும். விண்ணப்பம் கிடைக்கவில்லை என்று சமாளிப்பு பதில் கூற முடியாது. கட்டணமும் ஆன்லைனில் செலுத்தப்பட்டுவிடும். மனு அளித்ததிற்கான ஆதாரமும் ஆன்லைனில் தெளிவானதாக இருக்கும். ஒருவர் சொந்த ஊரில், மாவட்டத்தில், மாநிலத்தில் இல்லாவிட்டாலும், வெளிநாட்டில் இருந்தாலும் தனக்கு தேவையான தகவலை ஆன்லைன் வாயிலாக எளிதாக பெற்றுக்கொள்ள இயலும். எனவே இரண்டாவது மேல்முறையீட்டு மனுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் வசதி ேபான்று அனைத்து துறை அலுவலகங்களிலும் தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு ஆன்லைன் வசதி ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்’ என்றனர்.

Related Stories: