போக்குவரத்து பணிமனைகளில் தரமற்ற சாப்பாடு? கான்டிராக்டர்களுடன் உணவு பாதுகாப்பு துறையினர் கூட்டா?: தொழிலாளர்கள் உடல்நலன் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் போக்குவரத்துத்துறைக்கு சொந்தமான பணிமனைகளில் தரமற்ற சாப்பாடு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ெதாழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம் என 8 இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல்  எஸ்இடிசி (அரசு விரைவு போக்குவரத்துக்கழகம்) சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.இதற்காக 320க்கும் மேற்பட்ட பணிமனைகள் நாடு முழுவதும் இருக்கிறது. ஓட்டுனர், நடத்துனர், பணிமனை பணியாளர்கள் என 1.30 லட்சத்துக்கும் மேலான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில்  பணியாற்றி வருகின்றனர். எனினும் அவர்களது சம்பள உயர்வு, பணிபலன் உள்பட பலவற்றையும் அளிக்காமல் போக்குவரத்து கழக நிர்வாகிகள் ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து பணிமனைகளில் தொழிலாளர்களுக்கு  வழங்கப்படும் உணவு தரமற்று இருக்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.தமிழகம் முழுவதும் உள்ள பணிமனைகளில் தொழிலாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் உணவுகள் பெரும்பாலும் தரமற்றதாக இருப்பதாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் புகார் கூறுகின்றனர்.  ஆனால் உணவு பாதுகாப்பு துறை உள்பட அதிகாரிகள் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.

இந்த தரமற்ற உணவால் தொழிலாளர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே இந்த விவகாரத்தில் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆங்காங்குள்ள  பணிமனைகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கையும் பாதிக்கப்பட்டவர்கள் விடுத்துள்ளனர்.இதுகுறித்து போக்குவரத்துத்துறையை சேர்ந்த ஊழியர்கள் ஒருவர் கூறியதாவது: பணிமனைகளில் தரமற்ற உணவே தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. உணவு தயாரிக்கும் பணியை செய்பவர்கள் ஏதோ ஒரு இடத்தில் தயாரித்து அதை  பணிமனைக்கு சுகாதாரமற்ற நிலையில் கொண்டு வருகிறார்கள். அவ்வாறு எடுத்துவரும் போது பெரும்பாலான நேரங்களில் உணவுகள் மூடப்படாமல், பாதுகாப்பற்ற முறையில் கொண்டுவரப்படுகிறது.

இதுகுறித்து பெரும்பாலான இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களுக்கும் ஒப்பந்ததாரர்களுடன் ஏதாவது பங்கு இருப்பதாகவே தோன்றுகிறது. சமீபத்தில் தொழிற்சங்கங்கள்  சார்பில் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக உணவு பாதுகாப்புத்துறையிடம், பணிமனைகளில் சோதனை செய்திருக்கிறீர்களா என கேள்வி எழுப்பி மனு அளிக்கப்பட்டிருந்தது.

அதற்கு பெரும்பாலான பணிமனைகளில் ஆய்வு செய்யவில்லை என்றே அதிகாரிகள் பதில் அளித்து இருக்கிறார்கள். மேலும் ஒருசிலர் எங்களுக்கு புகார் ஏதும் வரவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். அரசு வேலையில் இருப்போர் புகார்  அளித்தால் பிரச்னை வரும் என்பதால் புகார் அளிப்பதில்லை. எனவே இந்த விவகாரத்தில் புகார் வந்தாலும், வராவிட்டாலும் உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். அப்போது தான் தரமற்ற உணவு விநியோகம் செய்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். மேலும் இந்த  விவகாரத்தில் உயர் அதிகாரிகளும், தமிழக அரசும் ஆய்வு செய்து, தரமற்ற உணவுகளை விநியோகம் செய்து வரும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.அரசு வேலையில்இருப்போர் புகார் அளித்தால் பிரச்னை வரும் என்பதால் புகார் அளிப்பதில்லை.

Related Stories: