6 பேரின் பதவிக்காலம் ஜூலையில் முடிகிறது மாநிலங்களவைக்கு திமுக, அதிமுக தலா 3 பேரை தேர்வு செய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தை சேர்ந்த 6 பேரின் மாநிலங்களவை பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகிறது. இதில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.250 எம்.பி.க்களை கொண்ட மாநிலங்களவையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த 18 உறுப்பினர்கள் உள்ளனர். மாநிலங்களவையில் அதிமுகவை சேர்ந்த 12 பேரும், திமுகவை சேர்ந்த  4 பேரும் எம்.பி.க்களாக உள்ளனர். இதேபோல் மார்க்சிஸ்ட்  மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த இருவர் உறுப்பினர்களாக உள்ளனர்.  

இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த  அர்ஜுனன், மைத்ரேயன், ரத்தினவேல், லட்சுமணன், திமுக உறுப்பினர் கனிமொழி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி டி.ராஜா ஆகிய 6 பேரின் பதவி காலம் வரும் ஜூலை மாதம் நிறைவடைகிறது. காலி இடங்களுக்கான புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. அதன்படி அதிமுகவால்  அக்கட்சிக்கு  3 மாநிலங்களவை உறுப்பினர்களை எளிதாக தேர்ந்தெடுக்க முடியும். அதிமுகவுக்கு தற்போது 123 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் சில எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு 110 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதனால், திமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் 3 மாநிலங்களவை எம்பிக்கள் பதவியை எளிதில் பெற முடியும்.நடந்து முடிந்த மக்களவை தேர்தல் கூட்டணி ஒப்பந்தப்படி அதிமுக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை பாமகவுக்கும், திமுக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை மதிமுகவுக்கும் அளிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. அதன்படி  வைகோ மாநிலங்களவை எம்பியாக தேர்வாக அதிக வாய்ப்புள்ளது. ஆனால், அதிமுக கூட்டணியில் மக்களவை தேர்தலில் போட்டியிட பாமகவுக்கு 7 சீட் கொடுக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஒரு சீட்டில் கூட பாமக வெற்றிபெற வில்லை.  அதேநேரம், பாமகவால் அதிமுகவுக்கும் பெரிய அளவில் பயன் கிடைக்கவில்லை. அதனால், தேர்தல் ஒப்பந்தப்படி பாமகவுக்கு ஒரு மாநிலங்களவை சீட் கிடைக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை.அதிமுகவிற்கு புதுச்சேரியில் இருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் உள்ளார். தமிழகத்தில் இருந்து 6 புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்களின் பலம் 11 ஆகவும், திமுகவின் பலம் 6  ஆகவும் அதிகரிக்கும்.

Related Stories: