சோளிங்கர் அருகே இன்று குடிநீர் கேட்டு மக்கள் திடீர் மறியல்

சோளிங்கர்: சோளிங்கர் அடுத்த பிள்ளையார்குப்பம் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் ஆழ்த்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.  இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் சரிவர செய்யவில்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தும் நிலை உள்ளது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை சோளிங்கர்-பாணாவரம் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பாணாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியலால் இப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: