ஒவ்வொரு திட்டமும் நாட்டின் கடைக்கோடி குடிமகனையும் சென்றடைய வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி உரை

டெல்லி: சேவையை தொடரும் போது மக்களின் ஆசீர்வாதம் தானாகவே கிடைக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற  மக்களவைத் தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 352 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன்  ஆட்சியை  மீண்டும் தக்கவைத்துக் கொண்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டம்  டெல்லியில் இன்று  மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற மத்திய அரங்கில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, பிரதமராக மீண்டும் ஒரு  மனதாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து, பாஜகவின் நாடாளுமன்ற குழு தலைவராக தேர்வான நரேந்திர மோடிக்கு அமித்ஷா, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா  சுவராஜ், முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட  பின் அத்வானி, ஜோஷி காலில் மோடி விழுந்து ஆசி பெற்றார். இதனையடுத்து, இந்திய அரசமைப்பு சாசன புத்தகத்தை வணங்கிவிட்டு தனது உரையை  தொடங்கிய நரேந்திர மோடி, சிறப்பான முறையில் தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு  மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வரலாற்று வெற்றியை கொடுத்துள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்களும் இந்த வெற்றியை பெருமையாக  கொண்டாடுகிறார்கள். எங்களது சேவையை அங்கீகரிக்கும் வகையில் தேர்தலில் வெற்றியை தந்துள்ளனர். புதிய கடமைகளை முழுமையாக  நிறைவேற்ற தயாராக உள்ளோம். ஒருங்கிணைந்து செயல்படுவதே தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு காரணம். விமர்சனங்களை நான்  பெரிதாக எடுத்து கொள்வதில்லை. சுதந்திர இந்தியாவில் அதிக பெண் எம்.பி.க்கள் இந்த மக்களவையில் தான் உள்ளனர். பிராந்திய நலன், தேசத்தின்  எதிர்பார்ப்பு இரண்டிலும் சமரசம் செய்தது இல்லை என்றார்.

விஐபி கலாச்சாரத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும், உங்கள் தொகுதி மட்டுமின்றி தேசிய அளவில் பார்வை இருக்க வேண்டும், ஒவ்வொரு  திட்டமும் நாட்டின் கடைக்கோடி குடிமகனையும் சென்றடைய வேண்டும் என்றார். அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை  நம்பாதீர்கள் என்று புதிய எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை கூறினார். அனுபவம் வாய்ந்தவர்களுக்கு உரிய இலாகா வழங்கப்படும் என்றார்.

யார் சேவை செய்வார்கள் என்பதை அறிந்து மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். அனைவரும் ஒன்றிணைந்து புதிய இந்தியாவை கட்டமைப்போம்,  மாற்றுவோம். அனைவரின் ஆலோசனைகளையும் கேட்டு புதிய இந்தியாவை உருவாக்கும் பணியை மேற்கொள்வோம். புதிய இந்தியாவை  உருவாக்குவதற்கான எங்களின் பயணத்திற்கு புதிய பாதை கிடைத்துள்ளது. 2019-ல் இந்திய மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பு உலகையே ஆச்சரியப்பட  வைத்துள்ளது.  என்னை நம்பிய கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், மக்களுக்கும் நன்றி...இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். மேலும், முன்னதாக  முதல் முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

முன்னதாக இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜ மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் அனைவரும் இன்று   மாலைக்குள் டெல்லி வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டத்தில் கூட்டணி கட்சிகளான, முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரக்குமார், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சி   தலைவர் சரத்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: