மத்திய அமைச்சரவை பரிந்துரையின் படி 16-வது மக்களவையை கலைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி: மத்திய அமைச்சரவை பரிந்துரையின் படி 16-வது மக்களவையை கலைக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். 17-வது மக்களவைக்கு தேர்வான எம்.பி.க்களின் விவரங்களை குடியரசு தலைவரிடம் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அளித்தார். நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.

பாஜ 302 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஒரு தொகுதியில் மட்டும் இன்னும் முடிவு அறிவிக்கப்படவில்லை. இத்தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள் கடும் தோல்வியை சந்தித்தன. மாநில கட்சிகளில் அதிகபட்சமாக திமுக 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் எதிர்பார்த்த வெற்றியை பெறத் தவறின. தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, புதிய ஆட்சியை அமைப்பதற்கான வழக்கமான நடைமுறைகளை தொடங்கி உள்ளது. இந்நிலையில் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைக்க முடிவெடுக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் பரிந்துரைப்படி 16-வது மக்களவையை கலைக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: