தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா கடிதம் அளித்தார் ராகுல்.... ஏற்க மறுத்த காங்கிரஸ் காரிய கமிட்டி குழு

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தலில் அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார். அதற்கான ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியிடம் அளித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி ராகுல்காந்தியே தலைவராக தொடர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில், பாஜக பெரும்பான்மை பெற்றது. ஓரிரு மாநிலங்களில் மட்டுமே காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் ராகுல் போட்டியிட்ட அமேதி தொகுதியில் ஸ்மிருதி ராணியிடம் தோல்வியடைந்தார்.

வயநாடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றார். இந்த தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று கூடியது. இந்த கூட்டத்திற்கு ராகுல்காந்தி தலைமை வகிக்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம் பஞ்சாப் மாநில முதல்வர் அமிரீந்தர் சிங் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், மக்களவை தேர்தலில் தொடர்ந்து 2வது முறையாக கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று தனது கட்சித் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்ய முன்வந்து கடிதம் அளித்ததார். ஆனால் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் காரிய கமிட்டி குழுவினர் மறுப்பு தெரிவித்தனர். மேலும் ராகுல்காந்தியே காங்கிரஸ் தலைவராக தொடர விருப்பம் தெரிவித்தனர்.

ராஜினாமா கடிதம் அளிக்கவில்லை - காங்கிரஸ் விளக்கம்

கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல்காந்தி விலக முன்வந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது. ஒருசில ஊடகங்களில் ராகுல் ராஜினாமா என பொய்யான செய்தி பரப்பப்பட்டதாக காங். செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

Related Stories: