தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி எதிரொலி: அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற பாஜக முடிவு

சென்னை: தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளதால், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற பாஜக முடிவு  செய்துள்ளது. அதிமுக தலைவர்கள் யாரும் தங்கள் வெற்றிக்காக வேலையும் செய்யவில்லை, பணமும் செலவு செய்யவில்லை என்று மேலிடத்துக்கு  சரமாரியாக குற்றச்சாட்டு கூறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், தமாகா  உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக  கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளும் தோல்வி அடைந்தது. அதிமுகவும் போட்டியிட்ட 20 தொகுதிகளில் ஒரு  தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. நாடு முழுவதும் பாஜக ஆதரவு அலை வீசிய நிலையில், தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு இடம்கூட கிடைக்காதது அகில இந்திய அளவில் யோசிக்க  வைத்துள்ளது. காரணம், நீண்ட ஆண்டுகளாக தமிழகத்தில் பாஜவுக்கு செல்வாக்கு இல்லாததால், எப்படியாவது இந்த தேர்தலில் திராவிட கட்சியான  அதிமுகவுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு ஒரு சில எம்பி சீட்டுகளை பிடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு கடந்த சில ஆண்டுகளாக பாஜ  மேலிட தலைவர்கள் முடிவு செய்திருந்தனர்.

அதற்காக, எடப்பாடி தலைமையிலான ஆட்சியாளர்களுக்கு பல வழிகளில் நெருக்கடி கொடுத்து, தங்கள்  திட்டத்துக்கு பணிந்துவரும்படி செய்தனர். அதன்படி, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு சில நாட்களுக்கு முன் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பாஜ தலைவர்கள்  பேச்சுவார்த்தையை தொடங்கினர். பாஜ தலைவர் அமித்ஷா மேற்பார்வையில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.  இறுதியில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய  ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த தொகுதிகளில் திருப்தி அடையாத பாஜ ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர், தென்சென்னை உள்ளிட்ட தொகுதியில் ஏதாவது இரண்டு  இடங்களை தர வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கேட்டார். ஆனால், முதல்வர் எடப்பாடி இந்த தொகுதிகளை தர மறுத்து விட்டார்.  இதனால் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பியூஸ் கோயல் கோபத்துடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெளியேறினார். இது அப்போது  பரப்பரப்பாக பேசப்பட்டது.

இதையடுத்து, மேற்கண்ட 5 இடங்களை வாங்கிக் கொள்ளுங்கள், அதிமுக சார்பில் பாஜ போட்டியிடும் 5 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு  தேர்தல் செலவுக்காக தலா ரூ.20 கோடி என ரூ.100 கோடி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சமாதானம் அடைந்த பாஜகவினர் அதிமுக  கொடுத்த 5 இடங்களை பெற்றுக் கொண்டு தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால், அதிமுக அறிவித்தபடி பாஜ வேட்பாளர்களுக்கு தேர்தல்  செலவுக்கான பணத்தை கொடுக்கவில்லை. இதையடுத்து பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன் சென்னையில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டுக்கு சென்று இதுபற்றி பேசினார். அவரும், இப்போது பணம் கொடுத்தால் தேர்தல் ஆணையத்திடம் சிக்கிக்  கொள்வோம். அதனால் ஏப்ரல் 16ம் தேதி இரவு 5 வேட்பாளருக்கும் தலா ரூ.20 கோடி வந்து சேரும். அந்த பணத்தை 17ம் தேதி வாக்காளருக்கு  கொடுங்கள் என்று கூறி அனுப்பினார். ஆனாலும் அறிவித்தபடி அதிமுக சார்பில் பாஜ வேட்பாளர்களுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர்.

இதுபற்றி பாஜ வேட்பாளர்கள் கட்சியின் தலைமையிடம் புகார் அளித்தனர். அதன்படி பாஜ தலைமை டெல்லியில் இருந்து தேர்தல் செலவுக்காக தலா  ரூ.9 கோடி கொடுத்தது. இந்த பணத்தையும் அதிமுகவினர் நூதன முறையில் பாஜ வேட்பாளர்களிடம் இருந்து பறித்துள்ளனர். அதாவது, பிரதமர் மோடி  தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்து கோவை, தேனி, கன்னியாகுமரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். இதில் தேனியில் மட்டும்  ஓ.பன்னீர்செல்வம் பொதுக்கூட்ட செலவை ஏற்றுக்கொண்டார். கோவை, கன்னியாகுமரியில் அதிமுக செலவு செய்துவிட்டு, அதற்கான பணத்தை பாஜ  வேட்பாளர்களிடம் இருந்து திரும்ப பெற்றுக் கொண்டுள்ளனர். அதேபோன்று முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாஜ  வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததற்கான செலவுகளையும், அதிமுக நிர்வாகிகள் பாஜ வேட்பாளர்களிடம் இருந்து திரும்ப பெற்றுள்ளனர்.

இதனால் பாஜ வேட்பாளர்கள், டெல்லியில் இருந்து கொடுத்த பணத்தை இதற்கே செலவு செய்துவிட்டு வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் இல்லாமல்  தடுமாறியுள்ளனர். இதனால்தான் பாஜ போட்டியிட்ட 5 தொகுதியிலும் ஓட்டை பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோன்று, அதிமுக  நிர்வாகிகளும் பாஜ வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யாமல் புறக்கணித்து விட்டதாக தற்போது மேலிடத்துக்கு புகார் அளித்துள்ளனர். தமிழகத்தில் பாஜ போட்டியிட கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை ஆகிய 5 தொகுதியிலும் தோல்வி அடைந்தற்கு காரணம்  என்ன என்று, டெல்லி பாஜ மேலிட தலைவர்களுக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதில், “தமிழகத்தில் அதிமுக  கூட்டணியில் இணைந்து பாஜ போட்டியிட்ட 5 தொகுதிகளில் அதிமுக ஓட்டு தங்களுக்கு கிடைக்கவில்லை. அதிமுக நிர்வாகிகளும் பாஜகவுக்கு  ஆதரவாக வேலை செய்யவில்லை. அவர்களின் அரசியல் உள்குத்து காரணமாகவே தோல்வி அடைந்துள்ளோம்.

தற்போது தமிழகத்தில் அதிமுக  வேட்பாளர்களும் வெற்றிபெறவில்லை. வரும் 5 ஆண்டுகளில் அதிமுக ஆதரவு பாஜகவுக்கு தேவையில்லை. தமிழகத்தில் பாஜ தனித்து போட்டியிட்டு  இருந்தால் கூட இதைவிட கூடுதல் வாக்குகளை வாங்கி இருக்க முடியும். அதனால் இனி வரும் காலங்களில் தமிழகத்தில் பாஜ தனித்து  போட்டியிட்டே கட்சியை வளர்க்கலாம். அதனால் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜ உடனே வெளியேற வேண்டும். இதற்கான முடிவை கட்சி  தலைமை உடனடியாக எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக கூட்டணியில் இருந்து பாஜ வெளியேற  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: