நாடாளுமன்ற தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றி: குடியரசு தலைவரை சந்தித்தார் பிரதமர் மோடி

டெல்லி: டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து 16-வது மக்களவையை கலைத்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி  அளித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் 345 தொகுதிகளை கைப்பற்றி, மத்திய ஆட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தக்க  வைத்து  கொண்டுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக 2வது முறையாக நரேந்திர மோடி (68) வரும் 30ம் தேதி பதவியேற்கிறார்.  தனிபெரும்பான்மை பலத்துடன், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2வது முறையாகப் பதவியேற்கும் வரலாற்று பெருமையை ஜவஹர்லால் நேரு, இந்திரா  காந்தி ஆகியோருக்கு அடுத்து நரேந்திர மோடி பெறுகிறார். இத்தேர்தலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அமைச்சரவை கூட்டம், 16-வது நாடாளுமன்ற மக்களவை கலைப்பு, பாஜ எம்பிக்கள் பிரதமரை தேர்வு செய்தல், புதிய அமைச்சரவை  குறித்த ஆலோசனை, குடியரசு தலைவரை மோடி சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரல், தேர்தல் ஆணையர்கள் மூன்று பேரும் தேர்தலில் வெற்றி  பெற்ற கட்சி விபரத்தை  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் அளித்தல், அதன் பின் பிரதமராக மோடி பதவியேற்பு அறிவிப்பு மற்றும் விழா  ஆகிய சம்பிரதாய நடவடிக்கைகள் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும்.

அதன்படி, இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. 16-வது நாடாளுமன்ற மக்களவைக்கான  காலாவதி நாள் ஜூன் 3ம் தேதி என்பதால், அதற்கு முன்பாக புதிய அரசு அமைக்கப்பட வேண்டும். அதையடுத்து, மத்திய அமைச்சரவை கூட்டத்தில்  16வது மக்களவையை கலைத்து 17-வது மக்களவையை ஏற்படுத்த குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதையடுத்து, குடியரசு தலைவர் மாளிகையில் ராம்நாத் கோவிந்தை சந்தித்த பிரதமர் மோடி, 16-வது மக்களவையை கலைத்த தீர்மானத்தை  அளித்தார். தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட குடியரசு தலைவர், புதிய அரசு பதவியேற்கும் வரை பதவியில் தொடருமாறு கேட்டுக்கொண்டார்.

Related Stories: