347 இடங்களில் பாஜக முன்னிலை; பிரதமர் மோடிக்கு எடப்பாடி, ரஜினிகாந்த், இலங்கை, இஸ்ரேல், ஜப்பான் பிரதமர்கள் வாழ்த்து

புதுடெல்லி: நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 347 இடங்களிலும், காங்கிரஸ் 90 இடங்களிலும், மற்றவை 105 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது.

மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

அதன்படி 344 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 89 இடங்களிலும், மற்றவை 109 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதால் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி தேர்வாகிறார். இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர், உலக அரசியல் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனிடையே பாஜக தலைவர் அமித் ஷா நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம் என ரணில் விக்ரமசிங்கே வாழ்த்துச் செய்தியில் தகவல் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான நட்பை பலப்படுத்துவது தொடரும் என்றும் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2-வது முறையாக மீண்டும் பாஜக ஆட்சியமைப்பதன் மூலம் நாட்டு மக்கள் பெருமையடைவதாக தெரிவித்துள்ள அவர், தங்களது தலைமையின் கீழ் நாடு சிறந்து விளங்க வாழ்த்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

பிரதமர் மோடிக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2019 தேர்தலில் தனிப்பெரும்பான்மையோடு 2-ம் முறை பிரதமராக பதவியேற்க இருக்கும் நரேந்திர மோடிக்கு இதயமார்ந்த வாழ்த்து என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் வாழ்த்து

மீண்டும் பிரதமராகவுள்ள மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மிகவும் மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். நீங்கள் சாதித்துவிட்டீர்கள் எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

மீண்டும் பிரதமாக உள்ள நரேந்திர மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே

மீண்டும் பிரதமாக உள்ள நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: