மீண்டும் பிரதமராகவுள்ள நரேந்திர மோடி..: பாஜக தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு மோடியின் தாயார் நன்றி!

குஜராத்: மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலையில் உள்ளதால் மோடி மீண்டும் பிரதமர் ஆகவுள்ள நிலையில், அவரது தாயார் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் மத்தியில் ஆளும் பாஜக 329 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இம்முறை ஆட்சிமாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் 102 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி உருவாகிறது. கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் அதிக இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றும் என தெரிகிறது. வட இந்தியா முழுவதிலும் மோடி அலை வீசினாலும், தென் இந்தியாவில் காலூன்ற முடியாமல் பாஜக திணறி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவின் நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் காந்தி நகரில் வசித்து வரும் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார், பொதுமக்களுக்கும் செய்தியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக தன்னுடைய வீட்டிலிருந்து தள்ளாடிக்கொண்டே வெளியில் வந்து இரு கைகளையும் கூப்பி அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். 98 வயதான மோடியின் தாயார் ஹீராபென் குஜராத்தின் காந்திநகரில் வசித்து வருகிறார். இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் இதுவரையில் மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி நாட்டின் பல தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. மோடியின் தாயார் வசித்து வரும் வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான பாஜக தொண்டர்கள் திரண்டு ஹர ஹர மோடி என கோஷம் எழுப்பி வருகின்றனர். தொண்டர்களைச் சந்தித்த மோடியின் தாயார் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். கட்சியினர் முதல் பொதுமக்கள் வரை மோடிக்கு நன்றி தெரிவித்து வரும் நிலையில், தன் மகனின் வெற்றியை நினைத்து பாஜகவின் வெற்றிக்கு வாழ்த்தும் விதமாகவும் மோடியின் தாயார் வீட்டை விட்டு வெளியே வந்து அனைவருக்கும் நன்றி செலுத்தியது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Related Stories: