பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலை... மோடி தலைமையில் இன்று பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டம்

புதுலெடல்லி: டெல்லியில் இன்று மாலை 5.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெற உள்ளது. மத்தியில் ஆட்சியைமைக்க தேவையான பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில் நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார். நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பாஜக 340 இடங்களிலும், காங்கிரஸ் 90 இடங்களிலும், மற்றவை 112 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

நாடாளுமன்றத்தின் 17வது மக்களவை தேர்தல் கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி கடந்த 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக கடந்த மாதம் 18ம் தேதி தேர்தல் நடந்தது.

அதோடு, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் நடந்தது. அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 19ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி 340 இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 90 இடங்களிலும், மற்றவை 112 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதால் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி தேர்வாகிறார். இதனையடுத்து இன்று மாலை டெல்லியில் பாஜக ஆட்சிமன்ற குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது.

Related Stories: