தேசிய ஜூனியர் பேட்மின்டன் தகுதி சுற்று போட்டிகளில் தமிழக வீரர்கள் அசத்தல்

சென்னை: தேசிய ஜூனியர் பேட்மின்டன் போட்டியின் தகுதிச் சுற்றில் தமிழகத்தை சேர்ந்த நிகில், காயத்திரி, அருள் பாலா ஆகியோர்  வெற்றி பெற்றனர். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் தேசிய தரவரிசை ஜூனியர் பேட்மின்டன் போட்டி  (யு-19) நடக்கிறது. இந்திய பேட்மின்டன் கூட்டமைப்பின் ஆதரவுடன் தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் நடத்து, இப்போட்டியில் 400 பெண்கள், 800 ஆண்கள் என மொத்தம் 1200 பேர் பங்கேற்கின்றனர். தகுதிச் சுற்றின் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று காலை தொடங்கின.

மாநில அரசின் விளையாட்டு/இளைஞர் நலன் துறை முதன்மை செயலர் தீரஜ்குமார் போட்டியை தொடங்கி வைத்தார்.  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள், பேட்மின்டன் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தகுதிச் சுற்று போட்டியின் முதல் சுற்றில் தமிழக வீரர் நிகில் 16-14, 15-12 என்ற நேர் செட்களில் மத்தியபிரதேசத்தின் மன்னாஸ் பஜாஜை வீழ்த்தினார்.  பெண்கள் பிரிவில் தமிழகத்தின் எஸ்.காயத்ரி 15-12, 16-14 என்ற நேர் செட்களில் டெல்லியின் ரியாவை வீழ்த்தினர்.  தமிழகத்தின் ஆர்.அருள்பாலா 15-8, 15-12 என்ற நேர் செட்களில் மகாராஷ்டிராவின் புருதா  தேகடேவை வென்றார். தகுதிச் சுற்று ஆட்டங்கள் இன்றும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

Related Stories: