தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளால் ராக்கெட் வேகத்தில் பறந்தது பங்குச்சந்தை

* 60 நொடிகளில் ₹3.2 லட்சம் கோடி லாபம்

* 10 ஆண்டுகளில் இல்லாத அபார உச்சம்

மும்பை: தேர்தலுக்கு பின்பு வெளியான கருத்துக்கணிப்புகளில் பாஜ மீண்டும் வெற்றி பெறும் என்று அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, பங்குச்சந்தைகள் நேற்று இமாலய உச்சத்தை எட்டின. வர்த்தகம் தொடங்கிய 60 விநாடிகளிலேயே, முதலீட்டாளர்களுக்கு ₹3.2 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. மும்பை பங்குச்சந்தை 1,422  புள்ளிகள் அதிகரித்தது. தேர்தல் அறிவிப்புக்கு பிறகு பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. மத்திய அரசின் சில கொள்கை முடிவுகளால் தொழில்துறை முடக்கம், பொருளாதார வளர்ச்சி சரிவு, பெட்ரோல், சமையல் காஸ் விலை உயர்வு என பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. இதுதவிர, ரபேல் ஊழல் விவகாரமும் தேர்தல் நெருங்கும் நிலையில் விஸ்வரூபம் எடுத்தது. இதனால், பெரும்பாலான மாநிலங்களில் பாஜ மீது பொதுமக்கள் அதிருப்தியில் இருந்ததை காண முடிந்தது.

எனவே, மீண்டும் பாஜ ஆட்சி வர வாய்ப்பில்லை என கருதிய முதலீட்டாளர்கள், தேர்தல் நெருங்க நெருங்க முதலீடுகளை மிகுந்த கவனமுடன் மேற்கொண்டனர். இதனால், கடந்த ஏப்ரல் 26ம் தேதியில் இருந்து தொடர்ந்து 9 நாட்களாக பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இந்த 9 நாள் வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ரூ.8.53 லட்சம் கோடியை இழந்தனர். பங்குசந்தை குறியீடு 1,941 புள்ளிகள் சரிந்தது. இதன்பிறகும் பங்குச்சந்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. ஆனால், கடந்த வாரத்தில் கடைசி 2 நாட்களில் பங்குச்சந்தை திடீர் ஏற்றம் கண்டது. கடைசி நாளான வெள்ளிக்கிழமை, மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 537.29 புள்ளிகள் அதிகரித்து 37,930.77 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி 150.05 புள்ளிகள் உயர்ந்து 11,407.15 ஆகவும் இருந்தன.

இதற்கிடையில், நேற்று முன்தினம் வெளியான கருத்துக்கணிப்புகளில் பாஜ மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கேற்ப இன்றைய பங்குச்சந்தையின் போக்கு காணப்படும் என்று சந்தை நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்கேற்ப நேற்று வர்த்தகம் துவங்கியதுமே, பங்குச்சந்தைகள் படுவேகமாக ஏற்றம் கண்டன. காலையில் வர்த்தகம் துவங்கிய 60 நொடிகளிலேயே, முதலீட்டாளர்களுக்கு 3.18 லட்சம் கோடி லாபம் கிடைத்தது. அதாவது, கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் பங்குகளின் மதிப்பு ₹1,46,58,710 கோடியாக இருந்தது. நேற்று வர்த்தகம் துவங்கிய உடனேயே பங்குகளின் மதிப்பு ₹1,49,76,896 கோடியானது. பங்குகள் லாபத்துடன் கைமாறின. மாலை வர்த்தக முடிவில் பங்குகள் மதிப்பு ₹5,33,463.04  கோடி உயர்ந்து ₹1,51,86,312.05 கோடியானது.

குறிப்பாக, அதானி நிறுவன பங்குகள் அபார ஏற்றம் கண்டன. அதானி போர்ட் பங்குகள் 10.99 சதவீதம் (₹40.35). அதானி காஸ் 12.77 சதவீதம், அதானி என்டர்பிரைஸ் 28.96 சதவீதம் (₹34.55) அதிகரித்தது. இதுதவிர, பாரத ஸ்டேட் வங்கி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் பங்கு மதிப்புகளும் அபாரமாக உயர்ந்தன. ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் பங்குகள் மதிப்பு 4.82 சதவீதம் (₹61.15) அதிகரித்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 1,421.90 புள்ளிகள் உயர்ந்து 39,352.67 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 421.10 புள்ளிகள் அதிகரித்து 11,828.25 ஆக இருந்தது. ஒரே நாளில் இவ்வளவு புள்ளிகள் அதிகரித்தது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. இதற்கு முன்பு 2013 செப்டம்பர் 10ம் தேதிதான் பங்குச்சந்தைகள் அபார உயர்வை சந்தித்தன. தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இந்த நிலை நீடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.

Related Stories: