இவர்கள் சாதிக்கப் பிறந்த மாற்றுத்திறனாளிகள்... பயற்சிக்கு தரமான மைதானங்கள் இல்லை

நெல்லை: மனித சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு படைப்புத்திறனும், தனித் திறமைகளும் உண்டு. அதே போலத் தான் மாற்றுத் திறனாளிகள். இவர்கள் மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும் தங்கள் திறமைகளை வெளிக் கொணர வேண்டும் என்ற உத்வேகத்தில், கிரிக்கெட்டில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். பார்வையற்றோர் கிரிக்கெட் விளையாட்டிற்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பார்வையற்றோர் கிரிக்கெட் கழகம் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 14 பார்வையற்றோர் கிரிக்கெட் அணிகளும், 200 கிரிக்கெட் வீரர்களும் உள்ளனர். இதில் 140 பேர் கிரிக்கெட் சங்கத்தில் பதிவு செய்த வீரர்கள். சக மனிதர்களை போல் தம்மாலும் கிரிக்கெட் விளையாட முடியும் என இவர்கள் மார்தட்டி வருகின்றனர். பொதுவாக கிரிக்கெட் விளையாட்டில் உள்ள அனைத்து விதிகளும் பார்வையற்றோர் கிரிக்கெட் விளையாட்டிற்கும் பின்பற்றப்படுகின்றன. இவர்களுக்கான கிரிக்கெட் பந்து மட்டும் மாறுபட்டதாகும். அதுபோல் பந்து வீச்சிலும் தரையில் தவழ்ந்து வரும் வகையில் மாற்றம் உள்ளது. இவ்வகை பந்துகள் பைபர் பிளாஸ்டிக்கில் உள்பகுதியில் பால்ரஸ் குண்டுகள் போடப்பட்டிருக்கும். இதனால் பந்து தரையில் தவழ்ந்து வரும்போது ஏற்படும் சத்தத்தை கவனத்தில் கொண்டு வீரர்கள் பந்தை மட்டையால் அடித்து விளையாடுவார்கள். போட்டியில் பங்கேற்கும் பார்வையற்றோர் பி1, பி2, பி3 என அவர்களின் பார்வைத் திறனை வைத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றனர். பி1 பிரிவில் உள்ளவர்கள் முழு பார்வை திறன் குன்றியவர்கள், பி2 பிரிவில் 3 மீட்டர் வரை பார்வை திறன் உள்ளவர்கள், பி3 பிரிவில் உள்ளவர்கள் 6 மீட்டர் வரை பார்வை திறன் உள்ளவர்கள்.

ஒவ்வெரு பிரிவிலும் பி1ல் 4 பேர், பி2 3 பேர், பி3 4 பேர் என அணிக்கு 11 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். மாற்று வீரர்களாக ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் வீதம் 3 பேர் விளையாட்டில் பங்கேற்கின்றனர். பொதுவான கிரிக்கெட் விளையாட்டில் பின்பற்றப்படும் விதிகளின் படி ரன்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் முழு பார்வை திறன் குறைந்தவர்கள் ஒரு ரன் அடித்தால் 2 ஆக வழங்கப்படுவது தனி சிறப்பாகும். பந்துகளை வீசும்போது பேட்ஸ்மேன் நிற்கும் கிரீஸ் உள்ளே விழுந்தால் நோபாலாக எடுத்துக் கொள்ளப்படும். குறைகளை மறந்து மனத்திடத்துடன் சாதிக்க வேண்டும் என்ற சிந்தனை தூண்டுதலால் பார்வையற்றோர் கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வத்துடன் வீரர்கள் விளையாடி மகிழ்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க செயலர் மகேந்திரன் கூறுகையில், நாங்கள், இந்திய பார்வையற்ற கிரிக்கெட் அசோசியேஷனில் உறுப்பினராக உள்ளோம். தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் (பிசிசிஐ) இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீரர்கள் சாதாரண மைதானங்களில்தான் பயிற்சி மேற்கொள்கின்றனர். நல்ல அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையிலான மைதானங்களில் பயிற்சி மேற்கொள்ள முடிவதில்லை. இதனால் தேசிய, உலக அளவிலான போட்டிகளில் மிளிர முடியாத நிலை உள்ளது. என்றார். பார்வையற்றோர் முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் சந்தானம் கூறுகையில்; பார்வையற்றோர் கிரிக்கெட் கழகம் மூலம் தமிழகம் முழுவதும் போட்டிகள் நடத்தப்பட்டு வீரர்கள் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். அவர்களும் தங்களின் குறைகளை மறந்து விளையாட்டில் முழு மகிழ்ச்சியுடன் விளையாடுகின்றனர். எனினும் வீரர்கள் பயிற்சி பெற தரமான மைதானங்கள் இல்லை, என்றார்.

Related Stories: