தொடர்ச்சியாக எரிந்து, புகையும் தீ... மரங்களை கருகச்செய்து மழைக்கு உலை வைக்கும் செங்கல்சூளைகள்

▶ முறைப்படுத்துவார்களாக அதிகாரிகள்

▶ சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

சேலம் : தமிழகத்தில் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், மழை வளம் குறைந்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, செங்கல் சூளைகளை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. கட்டுமான பணியில் முக்கிய மூலப்பொருட்களில் ஒன்றாக இருப்பது செங்கல். தமிழகத்தில் சேலத்தில் தான் அதிகளவில் செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. சேலத்திற்கு அடுத்தபடியாக தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் செங்கல் சூளைகள் உள்ளது.

சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் செங்கல் சென்னை, திருச்சி, கோவை, ஈரோடு, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் செங்கற்களுக்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக, சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் விளைநிலங்களை அழித்து, செங்கல் சூளைகளை அதிகளவில் தொடங்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் மாவட்டம் முழுவதும் 200 செங்கல் சூளைகள் இருந்தன. ஆனால், சில ஆண்டுகளில் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கில் செங்கல் சூளைகள் உருவாகியுள்ளன.

alignment=

இங்கு நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சூளையில் ஒரு வாரத்திற்கு மேலாக சுட்டால் தான் முழு செங்கலாக, அதனை வெளிக்கொண்டு வரமுடியும்.  இந்த ஒரு வாரத்தில் 24 மணிநேரமும் சூளையில் இருந்து புகை வெளியேறி கொண்டு தான் இருக்கும். இவ்வாறு வெளியேறும் புகையால் அருகாமை குடியிருப்புவாசிகள், ஆஸ்துமா நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும், மேலும் செங்கல் சூளை சுற்றி பல அடி தூரத்திற்கு நிலம் வெப்பம் அதிகரித்து காணப்படுவதாகவும், புகையால் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மழை வளம் குறைந்து வருவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

alignment=

இது குறித்து சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து பேளூர் செல்லும் ரோட்டில் முட்டைகடை, குள்ளம்பட்டி, செல்லியம்பாளையம், நாட்டாமங்கலம், கூட்டாத்துப்பட்டி, நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துகோம்பை, நடுப்பட்டி, சின்னமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் உள்ளன.

இதைதவிர சுக்கம்பட்டி, அடிமலைபுதூர், ஆச்சாங்குட்டப்பட்டி, ஓமலூர், மேச்சேரி, வாழப்பாடி, ஆத்தூர், மல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் செங்கல் சூளைகள் அதிகளவில் உள்ளன. இந்த சூளைகளில் காயவைத்த செங்கல்லை முழு செங்கலாக ெகாண்டு வர பத்து நாட்களாகும். இந்த பத்து நாட்களும் சூளைகள் தொடர்ந்து எரிவதும், புகைவதுமாக இருப்பதால், அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் சூளையை சுற்றியுள்ள விளைநிலங்களிலும் வெப்பத்தின் தாக்கம் ஏற்படுகிறது.

  சூளையில் இருந்து வெளியேறும் புகையால் இந்த பகுதியில் வானில் மேகங்கள் கூடுவதில்லை. பக்கத்தில் ஒரு மைல் தூரத்தில் நல்ல மழை பெய்கிறது. ஆனால், சூளைகள் இருக்கும் பகுதியில் தூறல் மட்டுமே விழுகிறது. இதனால் கிணறு, போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதித்து, விவசாய பணிகளும் கடுமையாக பாதிக்கிறது. மழை வளம் இல்லாததால் அயோத்தியாப்பட்டணத்தில் இருந்து பேளூர் வரை மட்டும் 2 லட்சம் தென்னை மரங்கள், 20 ஆயிரம் மாமரங்கள் அழிந்து விட்டன. இந்த பகுதிகளில் ெபரும்பாலும் பூச்செடி, தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

கடந்த சில ஆண்டாக 20 ஆயிரம் ஏக்கரில் பூச்செடி, தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. சாகுபடி செய்ய ஏற்ற நிலமாக இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் நிலத்தை விற்றுவிட்டனர். இந்த நிலங்களில் தான் தற்போது செங்கல் சூளைகள் அதிகளவில் முளைத்துள்ளன. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, செங்கல் சூளைகள் முறையாக அனுமதி பெற்று தான் இயங்குகிறதா? என்பதை கண்காணிக்கவேண்டும். அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் செங்கல் சூளைகளை முறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறினர்.

உள்ளாட்சித்துறையே பொறுப்பு  நழுவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம்

மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் கூறுகையில், ‘‘செங்கல் சூளைகளை பொறுத்தவரை, சிறிய செங்கல் சூளை உரிமையாளர்கள் யாரும் அனுமதி பெற்று உற்பத்தி செய்வதில்லை. சேம்பர் செங்கல் உற்பத்தி செய்பவர்கள் மட்டுமே மாசுகட்டுப்பாடு துறையில் உரிய அனுமதி பெறுகின்றனர். ஆனால் சாலையோரம் சிறிய அளவில் வைத்திருக்கும் செங்கல் சூளைகள் மீது உள்ளாட்சித்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செங்கல் சூளை பாதிப்பு குறித்து எங்களுக்கு புகார் கடிதம் வந்தாலும், நாங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்துறைக்கு அனுப்பிவிடுவோம். செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் பாதிப்பு இருக்க தான் செய்யும். நாம் ஆக்சிஸன் மட்டுமே சுவாசித்து வருவோம். ஆனால் செங்கல் வெளியேறும் புகையில் கார்பன் மோனக்சைடு வாயு இருக்கும். இந்த வாயு ரத்தத்தில் கலந்தால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கும்’’ என்றனர்.

Related Stories: