வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் பெரியாறு அணைப் பூங்காவில் பராமரிப்பு ‘ஜீரோ’

*குறைந்து வரும் சுற்றுலாப் பயணிகள்

சமூகவிரோதிகளின் கூடாரமாகும் அவலம்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே, பராமரிப்பு இல்லாத பிளவக்கல் பெரியாறு அணைப் பூங்கா, சமூக விரோதிகளின் கூடாரமாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

வத்திராயிருப்பு அருகே, மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பிளவக்கல்லில் பெரியாறு, கோவிலாறு அணைகள் உள்ளன. இதில் பெரியாறு அணையில் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் பராமரிப்பு இல்லாமல், விளையாட்டு உபகரணங்கள், ஊஞ்சல், சறுக்கு விளையாடும் சறுக்கு தடுப்பு ஆகியவை சேதமடைந்துள்ளன.

ஊஞ்சல் பழுதானதால், குழந்தைகள் ஊஞ்சல் விளையாட முடியாமல் தவிக்கின்றனர். சறுக்கலில் ஓட்டை விழுந்துள்ளதால், குழந்தைகள் ஆபத்தான நிலையில் சறுக்கு விளையாடுகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மீன் அருங்காட்சியகம் திறக்கப்படாமல் உள்ளது. இதில் உள்ள மேற்கூரை பழுதடைந்துள்ளது.

alignment=

கட்டி முடிக்கப்பட்ட கழிப்பறை திறக்கப்படாமல் உள்ளது. பூங்காவிற்கு அழகு சேர்க்க வைக்கப்பட்ட புள்ளிமான் சிலை சேதமடைந்துள்ளது. சூறாவளிக்கு சாய்ந்த மரங்கள் அப்புறப்படுத்தப்படவில்லை. சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்ல கட்டப்பட்ட விடுதியும் பராமரிப்பின்றி உள்ளது.

பூங்காவில் உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. பூங்காவை பராமரிக்க பணியாளர்களும் போதிய அளவில் இல்லை. அணை மதகிலிருந்து பூங்காவிற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதில் உள்ள சரளைக் கற்கள் சுற்றுலாப் பயணிகளை பதம் பார்க்கிறது. அணைக்குள் இறங்கி பார்க்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு, யானை, காட்டெருமை விலங்குகளால் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

எனவே, பெரியாறு அணை பூங்காவை பராமரித்து வண்ண, வண்ண நீரூற்றுகளை அமைக்க வேண்டும். பார்வையாளர் கோபுரத்தை சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டும். பூங்காவில் சேகரமாகும் குப்பைகளை அன்றாடம் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன் அருங்காட்சியகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். சேதமடைந்த சிலைகளை சீரமைக்க வேண்டும். மேலும், பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories: