தூங்கா நகருக்கு புகழ் சேர்க்கும் திருப்பரங்குன்றம் தொகுதி வளர்ச்சி திட்டங்கள் தூங்குகிறது

தூங்காநகர் மதுரைக்கு புகழ் சேர்க்கும் திருப்பரங்குன்றம் தொகுதியில் உருவான வளர்ச்சி திட்டங்கள் தூங்குகிறது. பழனி மலை போல் மலை உச்சிக்கு இழுவை ரயில் திட்டம் இழுபறியாகி நிற்கிறது, சர்வதேச விமான நிலையம், 375 ஏக்கரில் தொழில் பூங்கா முடக்கத்தால் வேலை வாய்ப்புகள் கைவிரிக்கப்பட்டுள்ளது, மல்லிகை பூ விவசாயிகள் வாழ்வில் மணம் வீசவில்லை.  

 வரலாற்று சிறப்பும், தூங்காநகரமாகவும் அமைந்த மதுரைக்கு புகழ் ேசர்க்கும் முக்கிய பகுதியாக திருப்பரங்குன்றம் தொகுதி அமைந்துள்ளது. முருக கடவுளின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடு என்ற சிறப்பை பெற்றது. இந்த தொகுதியில்தான் விமான நிலையம், காமராஜர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. மாநகராட்சி எல்கைக்குள் திருப்பரங்குன்றம், திருநகர், ஆர்வி.பட்டி, அவனியாபுரம், பசுமலைகளிலுள்ள 11 வார்டுகளும், திருப்பரங்குன்றம் ஒன்றியத்தை சார்ந்த விளாச்சேரி, வடிவேல்கரை, கீழகுயில்குடி, மேலகுயில்குடி, கரடிபட்டி, வடபழஞ்சி, தென்பழஞ்சி, சாக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம், தோப்பூர், தணக்கன்குளம், சிந்தாமணி, பிராக்குடி, கல்லம்பல், ஐராதவதநல்லூர், விரகனூர், புளியங்குளம், சிலைமான், பனையூர், சாமநத்தம், செட்டிகுளம், பெருமாநேந்தல், கூடல்செங்குளம், பெருங்குடி, முல்லாகுளம், வாழாநேந்தல், நிலையூர், பெரியஆலங்குளம், சூரக்குளம், வலையபட்டி, செட்டியபட்டி, வலையங்குளம், பாப்பனோடை, ராமன்குளம், குதிரைகுத்தி, குசவன்குண்டு, குசவபட்டி, விராதனூர், முத்தான்குளம், பனைக்குளம், சோழங்குருணி, எலியார்பத்தி, நெடுமதுரை, கொம்பாடி, ஒத்தைஆலங்குளம், பெரியகூடக்கோவில், பாரைப்பத்தி, நல்லூர், நெடுங்குளம், சின்னஅனுப்பானடி உள்ளிட்ட 32 ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன.

*இங்குள்ள கிராமங்களில் தான் மதுரை மல்லிகை பூ அதிகம் உற்பத்தியாகிறது. ஆனால் மல்லிகை மணம் அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகள் வாழ்வில் வீசவில்லை. ஏனென்றால் அரசு வாக்குறுதி அளித்தபடி மல்லிகை சென்ட் தொழிற்சாலை அமையவில்லை. குவிசார் குறியீடு பெற்ற மல்லிகை பூவுக்கு கட்டுபடியாகும் விலை கிடைக்காமல் வாடும் நிலையே நீடிக்கிறது.

* விமான நிலையம் அமைந்து 60 ஆண்டுகள் தாண்டியும் சர்வதேச அந்தஸ்துக்கு உயர முடியவில்லை. இதற்காக விமான ஓடுபாதை விரிவாக்கத்திற்கு மத்திய விமான ஆணையம் ஒதுக்கிய ரூ.700 கோடி நிதி திசைமாறி போனது. ஏனென்றால் அதற்காக ஆர்ஜிதம் முடித்த 620 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஒப்படைககாமல் 8 ஆண்டுகளாக இழுத்தடிக்கிறது. சர்வதேச விமான நிலையம் அமையாததால் புதிய தொழில்கள் உருவாகவில்லை.

* காமராஜர் பல்கலைக் கழகம் அருகே வடபழஞ்சியில் 375 எக்கரில் 2010ல் உருவாக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டல தொழில் பூங்கா முடங்கி கிடக்கிறது. இதனால் 30 ஆயிரம் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகள் கைகூடாமல் கானல் நீராக நிற்கிறது.

* வலைங்குளத்தில் அறிவிக்கப்பட்ட தொழில் பூங்கா முடங்கிக் கிடக்கிறது.

* பழனி மலை போன்று திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு இழுவை ரயில் திட்டம் உருவாக்கப்பட்டு கிடக்கிறது. இந்த திட்டம் நிறைவேறினால் சுற்றுலாதலமாக வாய்ப்பு இருந்தும் இழுபறியாய் நிற்கிறது.

இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் உருவாகி 8 ஆண்டுகளாக தூங்குகிறது. இதனால் தொகுதி வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது. நீண்ட இழுபறிக்கு பிறகு உருவான  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு இல்லாமல் அடிக்கல்லுடன் நிற்கிறது.

Related Stories: