இன்று தேசிய தொழில்நுட்ப தினம் டெக்னாலஜியும் வளரணும்... தேசமும் சேர்ந்து உயரணும்...

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதாரத்தை மட்டும் முக்கியமாக கொண்டது அல்ல... அதையும் தாண்டி பல விஷயங்கள் இருக்கின்றன. தேசிய பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இரண்டும் கூட முக்கியமானதுதான். தேசிய பாதுகாப்பில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது ஒவ்வொரு நாடும் பன்மடங்கு பலம் பெறும். அந்த வகையில் இந்தியாவில் தேசிய வகையில் தொழில்நுட்ப மாற்றம் ஏற்பட்ட நாளான இன்றைய தினத்தை(மே 11) தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடுகிறோம்.

ஏன் மே 11ல் கொண்டாட வேண்டும். கடந்த 1998, மே 11ம் தேதி ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி இந்திய அரசு அண்டை நாடுகளை அலற வைத்தது. வெற்றிகரமான இந்த நிகழ்வின் மூலம் இந்தியா, உலகின் அணு ஆயுத நாடுகள் பட்டியலில் தன்னையும் கெத்தாக இணைத்துக் கொண்டது. இப்ப உங்களுக்கே புரிஞ்சிருக்கும். ஆங்... இந்த நிகழ்வை நினைவு கூறத்தான் ஆண்டுதோறும் மே 11ம் தேதியை தேசிய தொழில்நுட்ப தினமாக கொண்டாடி மகிழ்கிறோம்.

உலக அளவில் தொலைபேசி, அலைபேசி கட்டணம் குறைவாக வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாளுக்கு நாள் அலைபேசி சந்தாதாரர்களின் பெருக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் சுமார் 70 கோடிக்கும் மேற்பட்டோர் வரை செல்போன் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இணையத்தள பயன்பாட்டை பொறுத்தவரை உலகளவில் நாம் 3வது இடத்தில் உள்ளோம். இன்று நாம் வங்கி பணப்பரிவர்த்தனை, மின்கட்டணம், பஸ், ரயில், விமான டிக்கெட் உட்பட பல விஷயங்களை மொபைல் மற்றும் கம்ப்யூட்டரில் உள்ள இணையதளம் மூலம் விரைவாக செய்து முடிக்கிறோம். நேர விரயம் பன்மடங்கு குறைந்து விட்டது.

விண்வெளித்துறையில் நமது நாடு வியத்தகு சாதனைகளை படைத்து வருகிறது. விண்ணில் பல செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவி, அண்டை நாடுகளை கூட ஆச்சரியமாகவும், பெருமையாகவும் பார்க்கும்படி செய்திருக்கின்றனர் நமது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். சென்னை வெள்ளம், கஜா புயலால் எண்ணற்ற மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்தபோது, வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட வலைத்தளங்கள் மூலமாக பலருக்கு உதவிகள் குவிந்தன. பலர் ஷேர் செய்து பல கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பாதிக்கப்பட்டோருக்கு கிடைக்க உதவினர்.

தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தும் வரை பிரச்னை இல்லை. ஆனால், அதே நேரத்தில் பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் மற்றும் நவீன ரக குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களால் தொழில்நுட்பம் மீது ஒரு அச்சம் பொதுவாக மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ப்ளூவேல் உள்ளிட்ட மொபைல் விளையாட்டுகளால், இந்தியாவில் எண்ணற்ற இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு வகையில் பாராட்டை பெற்றாலும், இதனால் பல தொல்லைகளும், பாலியல் வக்கிரங்களும் அதிகரிக்கத்தான் செய்கின்றன. இவற்றை முறைப்படுத்த அரசு முன்வர வேண்டும். தொழில்நுட்பத்தோடு தேசியமும் வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதே நல்லது.

Related Stories: