இன்று தொலைந்த காலுறை நினைவு தினம் : ‘என் ஷூவோட சாக்சை காணோம்...’

‘‘ஒரு ஷூ வச்சிக்கிட்டு நான் என்னடா செய்யப்போறேன்... அல்லது அதை எடுத்துக்கிட்டு நீ என்னடா பண்ணப்போறே...’’ என்று சினிமாவில் ஒரு காமெடி வசனம் வரும். இந்த மேட்டர் ஷூ சம்பந்தப்பட்டது அல்ல... சாக்ஸ் (காலுறை) தொடர்பானது.இன்று தொலைந்த காலுறை நினைவு தினமாம்... அடப்பாவமே... இதையெல்லாமா கூட கொண்டாடுவாங்கன்னு கேட்குறீங்களா? பதில் இருக்குங்க... அதாவது, எந்த ஒரு பொருளும், நிகழ்வும் இங்கு அலட்சியமானது அல்ல.. அவை எல்லாம் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பொக்கிஷங்கள். அழிக்க முடியாத நினைவலைகள் என பதில் வருகிறது.

அதென்ன தொலைந்த காலுறை நினைவு தினம். பரபரப்பான காலை நேரம். பள்ளி, அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருப்போம். திடீரென பார்த்தால் ஒரு சாக்ஸ் காணாமல் போயிருக்கும். வீடு முழுவதும் அலசுவார்கள். கிடைக்கவே கிடைக்காது. இருக்கும் ஒரு சாக்சையோ அல்லது பொருந்தாத வண்ணத்தில் உள்ள மற்றொரு சாக்சையோ போட்டு நாம் கிளம்பி செல்ல முடியாது.

‘‘ஒரு 3 செட் வாங்கிப்போடுங்கன்னா கேட்குறீங்களா...’’ என்று குடும்பத்தலைவியின் சப்தம் அப்போது ஓவராக கேட்கும். அமைதியாக அந்த திட்டை வாங்கிக் கொண்டு அதே வண்ணத்தில் இருக்கும் சுருங்கிய சாக்சை தேடி போட்டு செல்வோம். திடீரென ஒரு நாள் வீட்டை சுத்தம் செய்துக் கொண்டிருப்போம். அப்போது நாம் தொலைத்த சாக்ஸ் கண்ணில் அகப்படும். அதை பார்க்கும்போது, ‘‘அடடா... இதைத்தானே அன்னைக்கு வலை வீசி தேடினோம். இங்க கிடக்கு பாரு...’’ என்போம். இதெல்லாம் எங்கோ நடக்கிற நிகழ்வு அல்ல... உங்கள் வீடுகளில் வாரத்தில், மாதத்தில் ஒரு சில நாட்களில் நடக்கும் சம்பவமே அது.

எப்போதாவது கிடைக்கும் என எண்ணி அந்த ஒற்றை சாக்சை ஒரு பழைய துணிக்கூடையில் போட்டு வைத்திருப்போம். கிடைத்தாலும் அதை பயன்படுத்த யோசிப்போம். கிடைக்காதபட்சத்தில் அதை எல்லாம் சேகரித்து, அதற்கு விடை கொடுக்கும் நாள்தான் மே 9. ஆம்... இன்றுதான். அதைத்தான் தொலைந்த காலுறை நினைவு தினம் என குறிப்பிடுகின்றனர். இதற்காக ஒரு நிமிட மவுனமாகவும் இருப்பார்களாம்...!

‘இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல... அனைத்து ஜீவராசிகளுக்கும்தாம்’ என்போம். அது மட்டுமல்ல... நம்மோடு உறவாடும், உடன் வரும் பொருட்களையும் நாம் நினைவு கூற வேண்டும். அந்த அடிப்படையில்தான் இந்த தினம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் தெரிந்து ெகாள்வது என்ன? பொதுவாக, வெளியில் சென்று வீட்டு, வீட்டில் ஷூ, சாக்சை மெதுவாக கழற்றி அதற்குரிய இடத்தில் வைப்பது இல்லை. சாக்சை சிலர் தூக்கி வீசுவார்கள். அப்புறம் காணோமே என்று கதறுவார்கள். ஒரு நிமிடம் நாம் இழக்கும் பொறுமை, சில நேரங்களில் பல நிமிடங்கள், மணிகள், நாட்கள், மாதங்கள்... ஏன் வருடங்களை கூட வாழ்க்கையில் இழக்க வைக்கும். இந்த தினம் சொல்வது கூட இதைத்தான்...!

Related Stories: