தேவை அறிந்து சேவை செய்வோம்: (இன்று உலக செஞ்சிலுவை தினம்)

சேவை மனப்பான்மை என்றால் என்ன தெரியுமா? எதையுமே எதிர்பார்க்காமல் ஒருவரின் தேவையை உணர்ந்து செய்வதே ஆகும். அதை உலகளவில் செய்து பெரும் பாராட்டை பெற்ற அமைப்பு ரெட் கிராஸ். அதை பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் மே 8ம் தேதி ‘உலக செஞ்சிலுவை தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. ரெட் கிராஸ் அமைப்பு எப்போது, எப்படி, எந்த சூழலில் உருவானது என்பதை தெரிந்து கொள்வோமா? 1859ம் ஆண்டு சுவிட்சர்லாந்தை சேர்ந்த பிரபல வியாபாரியும், கோடீஸ்வரருமான ஹென்றி டுனான்ட், தனது வர்த்தகம் தொடர்பாக இத்தாலியில் உள்ள சோல்பெரினோ என்ற நகருக்கு வந்தார். அப்போது அந்நகரில் கடும் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் அங்குள்ள ஒரு வீதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். போரில் காயமடைந்தவர்கள் உதவி கேட்டு சப்தமிட்டபடியே இருந்தனர். குழந்தைகளும் உணவுக்காக கதறி அழுதன. அதையெல்லாம் கண்ட ஹென்றிக்கு வர்த்தக உணர்வு மறைந்தது. காயமடைந்த ராணு வீரர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகளை செய்தார். அவரோடு அங்குள்ள மக்களும் இணைந்து சேவையில் ஈடுபட்டனர். அத்தோடு விடவில்லை ஹென்றி.

ஐரோப்பாவை ஒரு ரவுண்டு வந்து போருக்கு எதிராக பிரசாரம் செய்தார். அப்போது தோற்றுவிக்கப்பட்டதுதான் ‘யங்மென்ஸ் கிறிஸ்டியன் அசோசியேஷன்’ (YMCA), செஞ்சிலுவை சங்கம். பெரும் கோடீஸ்வரரான ஹென்றி சமூக சேவையில் முழு நேரத்தையும் செலவழித்ததால், செலவுக்கே வழியின்றி தடுமாறினார். முகம் தெரியாதவர்களுக்கு எல்லாம் உணவிட்டவருக்கு, ஒரு வேளை உணவுக்கே வழியின்றி மிகவும் சிரமப்பட்டார். ஆனால், அவரது சங்கங்கள் பல நாடுகளுக்கு பரவி உலகளாவிய அந்தஸ்து பெற்றது. இவரது அரிய செயல்பாடுகளுக்காக 1901ல் அமைதிக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் 1910, அக்டோபர் 30ல் மறைந்தார்.

கட்டுரையை படிக்கும்போதே சேவை மனப்பான்மையோடு வாழ வேண்டுமென எண்ணத்தோன்றுகிறதா? இயற்கை பேரிடர், போரில் காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செஞ்சிலுவை சங்கம் நூற்றாண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. இச்ங்கமானது 7 முக்கிய கொள்கையை முன்னிறுத்துகிறது. அவற்றை பார்ப்போம்.

* மனித உயிர்களையும், அவர்களுக்கான ஆரோக்கியத்தையும் உறுதி செய்தல்.

* தேசம், இனம், ஜாதி சாகுபடின்றி ஒருவரின் துயரத்தில் பங்கு கொள்ளுதல்.

* அரசு மற்றும் அரசியல் சார்ந்த கொள்கைகளில் ஈடுபடாமல் இருத்தல்.

* ஒவ்வொரு நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் சேவை செய்தல்.

* யாருடைய விருப்பு, வெறுப்புகளுக்கு உட்படாமல் சேவை செய்தல்.

* சேவையின்போது ஒற்றுமையை கடைப்பிடித்தல்.

* சேவை சங்கங்கள் அனைத்துமே மிகுந்த பொறுப்பு, கடமை கொண்டவை.

- இப்படி கொள்கைகளை வகுத்து செயல்படுகிறது.

1863ல் ஜெனிவாவில் ஹென்றி டுனான்ட், கஸ்டவ் மோய்னியரால் ரெட் கிராஸ் அமைப்பு 25 பேர்களுடன் உருவாக்கப்பட்டது. தற்போது 150க்கும் மேற்ப்டட நாடுகளில் பரவி, கோடிக்கணக்கான தன்னார்வலர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: