ஓடிக்கொண்டே இருப்போம்... (இன்று உலக தடகள தினம்)

நேரத்தின் அருமையை ஓட்டப்பந்தய வீரனிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்’ என்பார்கள். இதை 100 மீ ஓட்டப்பந்தய வீரரிடம் கேட்டால், நேரத்தை வினாடி என்று கூட குறிப்பிடுவார். நாமெல்லாம் கால ஓட்டத்தில் ஓடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், ஒரு தடகள வீரர் தனது வளமான எதிர்காலத்திற்கு ஓட்டத்தில் காலத்தை நிர்ணயித்து ஓடிக் கொண்டிருக்கிறார். சரி... இப்ப எதுக்கு இது என்கிறீர்களா? இன்று உலக தடகள தினம். தடகளம் என்றால் என்ன? ஒரு விளையாட்டு மைதானத்தில் தடங்கள் அமைத்து, குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓடி வெற்றி பெறும் விளையாட்டுக்கு பெயர்தான் தடகளம். இதில் எத்தனை விளையாட்டுகள் இருக்கிறது என்பதை பார்ப்போமா? 100, 200 மீ உள்ளிட்ட ஓட்டங்கள், தடை தாண்டி ஓடும் ஒட்டம், மாரத்தான், போல்வால்ட், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் என பட்டியல் நீள்கிறது. ஆண்டுதோறும் இதன் எண்ணிக்கையும் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை தடகளத்தில் நாம் பெரிய அளவு சாதிக்கவில்லை. ஜமைக்கா, கனடா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் இப்படி பல நாடுகள்தான் பல ஆண்டுகளாக நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கின்றன. சமீபத்தில் நடந்த சர்வதேச ஆசிய தடகள போட்டியில் தமிழகத்தின் கோமதி மாரிமுத்து, 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்தார். பி.டி.உஷா, ஷைனி வில்சன் அஞ்சு ஜார்ஜ் என விரல் விட்டு ஓடி சாதனை பிடிக்கும் இந்திய தடகள நட்சத்திரங்கள் மிகவும் குறைவுதான். இதற்கு கிரிக்கெட்டை தவிர பிற விளையாட்டுகளை ஊக்கப்படுத்தாத இந்திய அரசும் ஒரு காரணம் என்பது மிகையல்ல. தொடர் ஊக்குவிப்பு, உயர்ரக தொழில்நுட்ப பயிற்சி, ஸ்பான்சர்ஸ் போன்றவை இந்தியாவில் இல்லாததே இதற்கு முக்கிய காரணம். சர்வதேச அளவிலான போட்டிகளில் விளையாடும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு போதிய உணவு, ஷூ உள்ளிட்ட வசதிகளை கூட நமது அரசு செய்து தருவதில்லை என்பது வேதனையான விஷயம்.

நாட்டுக்கவலையை விடுவோம். வீட்டுக்கவலையை யோசிப்போம். ஆரோக்கியமான உடலை பெற வேண்டுமா? நாமும் சிறிது தடகளம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அன்றாடம் நடைப்பயிற்சியோடு சிறிது நேரம், மெதுவாகவாவது ஓடுவது நல்லது. அல்லது வேகமாக நடக்கலாம். டாக்டர்களின் ஆலோசனையுடன் இதை நீங்கள் கடைப்பிடிக்கலாம். உங்கள் பிள்ளைகளுக்கு படிப்பு முக்கியம்தான். அதே நேரம் பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க வையுங்கள். இதன்மூலம் வளரும்போதே அவர்களது உடல் வலுவுடன் இருக்கும். வியர்வைகள் வெளியேறுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கல்வியோடு விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: