இன்று அறிவுசார் சொத்துரிமை தினம் உங்கள் படைப்புக்கு மரியாதை...!

அதென்ன அறிவுசார் சொத்துரிமை தினம் என்கிறீர்களா? கதை, கலை, இலக்கியம், ஓவியம் உட்பட சிந்தனைத்திறனை வெளிப்படுத்தி உருவாவதைத்தான் அறிவுசார் படைப்புகள் என்கிறோம். இவற்றை காப்பாற்ற, இதுதொடர்பான விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்த உருவானதே அறிவுசார் சொத்துரிமை தினம் ஆகும். அறிவுசார் சொத்துரிமை அமைப்பு மூலம் ஆண்டுதோறும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறந்த படைப்புகளை வெளிப்படுத்துபவர்களை கண்டுபிடித்து, அவர்களை ஊக்குவிக்கும் தினமாகவும் இது கருதப்படுகிறது. கடந்த 2001ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தலைப்புகளின் கீழ் இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அவற்றை பார்ப்போம்.

எதிர்காலத்தை உருவாக்குதல், ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தல், அறிவுசார் சொத்துரிமையை வணிகமாக்குதல், ஆக்கத்திறனை ஊக்கப்படுத்தல், சிந்தனை, கற்பனை, உருவாக்கம், கருத்துரு கலந்து படைப்பு, கற்பனைத்திறனை விரிவாக்குதல், அறிவுசார் சொத்துரிமையை மதித்தல், நவீனமயப்படுத்தல் என பல்வேறு தலைப்புகளில் தொடர்ந்து இத்தினம் போற்றப்பட்டு வருகிறது.

அறிவுசார் சொத்துரிமை தொடர்பாக பல சர்வதேச உடன்பாடுகள் உள்ளன. இவற்றில் வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமை 7 விஷயங்களை முன்னிறுத்துகின்றன. அவற்றை பார்ப்போம்.

1. காப்புரிமை,

2. பதிப்புரிமை,

 3. வர்த்தக சின்னங்கள்,

4. பூகோள அடையாளங்கள்,

5. தொழிலியல் வடிவமைப்புகள்,

6. மின்னணு இணைப்புச்சுற்று டிசைன்கள்,

7. தொழில் ரகசியங்கள்.

இவற்றில் காப்புரிமை முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. இதற்காக பல்வேறு அமைப்புகள், சங்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. காப்புரிமையை பொறுத்தவரை பொருட்களுக்கான காப்புரிமை, பொருட்களை தயாரிக்கும் முறைமைக்கான காப்புரிமை என இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது. காப்புரிமை பெறுவதன் மூலம், ஒரு பொருளை அதன் கண்டுபிடிப்பாளர் மட்டுமே பயன்படுத்த முடியும். இவற்றை முன்அனுமதியின்றியோ, திருட்டுத்தனமாகவோ யாரேனும பயன்படுத்தினால், அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதைத்தான் அறிவுசார் சொத்துரிமை தினம் வலியுறுத்தி வருகிறது. காப்புரிமை விஷயத்தில் இந்தியா மிகவும் பின்தங்கி உள்ளது. இங்குள்ள வேப்பமரத்தில் இருந்து தயாராகும் பல்வேறு வகை பொருட்களின் காப்புரிமை அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ளது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும்.

இந்திய பதிப்புரிமை சட்டத்தை பொறுத்தவர, 1957ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1984, 1994, 1999, 2010 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது. கடைசியாக 2012ம் ஆண்டில் மேலும் சில திருத்தங்கள் செய்யப்பட்டன.

ஒருவரின் படைப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட விஷயத்தை கல்விக்காகவோ அல்லது தனிப்பட்ட முயற்சிக்காகவோ, சம்பந்தப்பட்டவரின் முழு அனுமதி பெற்று பயன்படுத்தலாம். ஆனால், அவரது படைப்பை அப்படியே பயன்படுத்துவது காப்புரிமை சட்டப்படி பெருங்குற்றமாக கருதப்படுகிறது. இதுவரை உங்களது அறிவுசார் படைப்புகளை காப்பாற்ற முடியாதவர்கள், இனியாவது அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். ‘‘இது எனது அறிவுபூர்மான படைப்பு. அவற்றை நான் பாதுகாத்து வைத்துள்ளேன்...’’ - என முடிவு எடுங்கள். உங்கள் அறிவுசார் படைப்புகள் கொள்ளை போவதை தடுத்து நிறுத்துங்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: