வரலாற்றில் முதன்முறையாக பணம், தங்கமாக 933 கோடி பறிமுதல் 10 ஓட்டுச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு?

சென்னை: தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி எடுத்துச்சென்ற பணம், தங்கம், பரிசு பொருட்கள் என மொத்தம் 933 கோடி சிக்கியுள்ளது. மேலும் தர்மபுரி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் உள்ள 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி பதில் அளித்தார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஏற்பட்ட சிறு சிறு சம்பவங்களை தவிர, பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்துள்ளது. வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் 45 மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் 10ம் தேதிக்கு பிறகு, தேர்தல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 16,925 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 24 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களிடம் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 4,690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் சுவர் விளம்பரம் எழுதியதாக 3,792 வழக்குகளும், பணம் வழங்கியதாக 565 வழக்குகளும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறியதாக 393 பேர் மீதும் வழக்கு போடப்பட்டது. இதில் பணம் கொடுத்தததாக அதிமுக மீது 194 வழக்குகளும், திமுக மீது 155 வழக்குகளும், மற்ற கட்சியினர் மீது 216 வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சி-விஜில் மூலம் 2,823 புகார் வந்தது. இதில் முறையான ஆவணங்கள் இல்லாததால் 1916 புகார் தள்ளுபடி செய்யப்பட்டது. 1,264 புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், தேர்தல் முடிவடைந்த கடந்த 18ம் தேதி வரை பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழு நடத்திய வாகன சோதனை மூலம் 213.18 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதவிர 708 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் தங்க நகை மட்டும் 2,403 கிலோ ஆகும். 8.17 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்கள், 3.51 கோடி மதிப்புள்ள மதுபானம், 37 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. பணம், நகை, பரிசு பொருட்கள் என மொத்தம் 933 கோடி தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. இதில் முறையான ஆவணங்களை காட்டி 70.46 கோடி பணம் திரும்ப பெற்றுள்ளனர். (கடந்த தேர்தலில் 113 கோடி மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தர்மபுரி தொகுதி பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சில வாக்குப்பதிவு மையங்களில் நடந்த சம்பவங்களை தொடர்ந்து அங்குள்ள 8 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட சில கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று கடலூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியும், திருவள்ளூர் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடி என மொத்தம் 10 வாக்குச்சாவடிகளில் நடந்த சம்பவங்கள் குறித்து தேர்தல் பார்வையாளர், மாவட்ட தேர்தல் அதிகாரி, போலீஸ் அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று (நேற்று) மாலை கிடைக்கும். உடனடியாக அந்த அறிக்கை, இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மறுவாக்குப்பதிவு குறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பியில் நடந்த சம்பவம், தேர்தல் தொடர்பாக நடைபெற்ற சம்பவம் கிடையாது. அங்கு மறுவாக்குப்பதிவு நடைபெற வாய்ப்பு இல்லை. கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 2000 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து சிறப்பு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: