வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு ஏற்பாடு தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா நேரில் ஆய்வு

சென்னை: சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள  பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா நேற்று நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடந்தது. சென்னை மாவட்டத்தில் 3 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இந்நிலையில் வட சென்னை மற்றும் பெரம்பூர் இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பகுதிகள் சிசிடிவி கேமராக்கள் மூலமாக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 துணை கமிஷனர் தலைமையில் 3 கூடுதல் துணை கமிஷனர்கள், 3 உதவி கமிஷனர்கள், 27 இன்ஸ்பெக்டர்கள், 54 சப்-இன்ஸ்பெக்டர்கள், 135 காவலர்கள், 300 ஆயுதப்படை காவலர்கள், 60 அதி தீவிர விரைவுப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சுழற்சி முறையில் வாக்கு எண்ணும் நாள் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தமிழக தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லா நேற்று காலை நேரில் ஆய்வு செய்தார். மூன்று மையங்களுக்கும் நேரில் சென்ற அவர் 3 துணை கமிஷனர்களிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: