கைரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு தேர்வாணைய முன்னாள் ஆலோசகர் முன்ஜாமீன் மனு

சென்னை: கைவிரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான  தேர்வில் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஜி.வி.குமார் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதில் தருமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய கைவிரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான  தேர்வில் அருணாச்சலம் என்பவர் அளித்த பதில் தவறானது என்று தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அருணாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஐஐடி பேராசிரியர் டி.மூர்த்தி பெயரில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை போலியானது என்று மனுதாரர் அருணாச்சலம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து இந்த வழக்கில் சீருடை பணியாளர் தேர்வாணையம் பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, சீருடை பணியாளர் தேர்வாணைய ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தேர்வாணையத்தின் ஆலோசகரான ஜி.வி.குமார் ஐ.ஐ.டி. பேராசிரியர் என்று டி.மூர்த்தி என்பவரை ஆணையத்திற்கு அறிமுகம் செய்தார். மூர்த்தியிடமிருந்து அறிக்கையும் பெற்றுத்தந்தார்.

இந்த விஷயத்தில் ஜி.வி.குமாரும், டி.மூர்த்தியும் சேர்ந்து சீருடை பணியாளர் தேர்வாணையத்தை ஏமாற்றி உள்ளனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறியிருந்தார். இந்நிலையில், ஜி.வி.குமாரை மத்திய குற்றபிரிவு போலீசார் ஏப்ரல் 1ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, தனக்கு ஜாமீன் கோரி ஜி.வி.குமார் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ஜி.வி.குமார்  சென்னை உயர் நீதிமன்றத்தில்  ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸ் பதில் தருமாறு உத்தரவிட்டார். வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: