சென்னை பல்கலையில் இலவச கல்வி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் : பதிவாளர் அறிவிப்பு

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித்திட்டத்துக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் கூறினார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:ஏழை மாணவர்கள் இளநிலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில், 2010-11ம் கல்வியாண்டில் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித்திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ் 2019-20ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்னை பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மூன்று மாவட்டங்களை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், விவசாயம் மற்றும் கூலி வேலை செய்பவர்களின் குழந்தைகள், குடும்பத்தின் முதல் தலைமுறை மாணவர்கள், கைம்பெண் அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த திட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் பெற்றோரின் வருட வருமானம் 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இலவச கல்வித்திட்ட விண்ணப்பத்தை சென்னை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர்(பிஆர்ஓ) அலுவலகத்தில் பெறலாம், கூடுதல் விவரங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம். பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் (www.unom.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 8ம் தேதிக்குள் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு சென்னை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: