பணியாளர் நியமனம் செய்ய 1.50 கோடி லஞ்சம் உதவி கமிஷனருக்கு தொடர்பு இருப்பது அம்பலம்

சென்னை: விதிமீறி கோயில் பணியாளர் நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில் 1.50 கோடி லஞ்சம் பெறப்பட்டு இருப்பதாக கமிஷனரிடம் இணை ஆணையர் அறிக்கை அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உதவி கமிஷனர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த உதவி கமிஷனரிடம் விசாரணை நடத்த கமிஷனர் பணீந்திர ரெட்டி முடிவு செய்துள்ளார். சென்னை முகப்பேர் வெள்ளாள தெருவில் சந்தான சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உளளது. பொதுவாக, கோயில் நிர்வாகம் சார்பில் பணியாளர்கள் நியமிக்கப்படுவது என்றால் அறநிலையத்துறை ஆணையரின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், இந்த கோயில் நிர்வாகம் சார்பில் தன்னிச்சையாக பணியாளர்களை நியமனம் செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, பணியாளர்களிடம் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை பணம் பெற்றுக்கொண்டு நியமனம் நடந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அறநிலையத்துறை கமிஷனருக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவின் பேரில் சென்னை மண்டல இணை ஆணையர் ஹரிப்பிரியா தலைமையில் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் 40 பேர் விதிகளை மீறி நியமனம் செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து 2 செயல் அலுவலர்கள் மீது 17 பி பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 40 பேர் நியமனம் செய்ததற்கு 1.50 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறி பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஆணையர்தான் சம்பளம் நிர்ணயம் செய்து ஒப்புதல் தர வேண்டும். ஆனால், உதவி ஆணையர் ஒருவர் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, அதாவது பட்டியலில் சேராத கோயில் என்று கணக்கு காட்டி சம்பளம் நிர்ணயம் செய்திருப்பதாகவும், இதுதொடர்பாக அந்த உதவி ஆணையரிடம் விசாரணை நடத்த அறநிலையத்துறை கமிஷனர் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது, அறநிலையத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: