ஆரணி மக்களவை தொகுதியில் பரபரப்பு வாழ்வு, சாவுக்கு கூட வராத சிட்டிங் எம்பிக்கு மீண்டும் வாய்ப்பா?..... அதிமுகவினர் கடும் எதிர்ப்பு

ஆரணி மக்களவை தொகுதியில் வாழ்வு, சாவுக்கு கூட வராத சிட்டிங் எம்பிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதால் அதிகமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஆரணி தொகுதியில் போட்டியிட சிட்டிங் எம்பியான செஞ்சி சேவல் வெ.ஏழுமலைக்கு சீட் வழங்கப்பட்டது. 55 பேர் நேர்காணலுக்கு சென்றபோதும் சிட்டிங் எம்பிக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அக்கட்சியினரை  அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆரணி தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் அல்லது அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அண்ணன் சி.வி.ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், மீண்டும்  வெ.ஏழுமலைக்கு சீட் வழங்கியது தொகுதி முழுவதும் எதிர்ப்பலை வீச தொடங்கியுள்ளதாக அக்கட்சியினரே பேச தொடங்கியுள்ளனர். ஏழுமலை மீது ஏராளமான புகார்களை அக்கட்சியினர் தலைமைக்கு அனுப்பி வருகின்றனர். அதேபோல் ஆரணி மக்களவை தொகுதிக்குட்பட்ட போளூரில் செஞ்சி ஏழுமலைக்கு அதிமுகவினர் வெளிப்படையாகவே எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர். ‘கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற இவர் தொகுதிக்காக எதுவும் செய்யவில்லை. நன்றி சொல்லக்கூட வரவில்லை. கட்சியினர்  நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை. கட்சியினர் வாழ்வுக்கும், சாவிற்கும் கூட வராதவருக்கு எப்படி வாக்களிக்க முடியும்? பொதுமக்களிடமும், கட்சியினரிடமும் என்ன சொல்லி வாக்கு கேட்க  முடியும். கட்சி பதவியில் இருந்தும், எம்பியாக இருந்தும் எதுவும் செய்யாதவருக்கு மீண்டும் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

வேட்பாளரை மாற்றவேண்டும். இவரே தொடர்ந்தால் கட்சியினர் யாரும் வேலை செய்யமாட்டார்கள். தேர்தலில் வெற்றி ெபற மாட்டார். கட்சியினர் யாரும் அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள். அதிமுக படுதோல்வி  அடைவது உறுதி’’ என  அக்கட்சியினர் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர்.போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, செஞ்சி, மயிலம்  என 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஆரணி மக்களவை தொகுதியில் முதன்முதலாக போளூரில் வேட்பாளருக்கு எதிராக அதிமுகவினர் போர்க்கொடி  தூக்கியுள்ளனர். இந்த எதிர்ப்பலை அனைத்து தொகுதிகளிலும் தொடரும் என்று அக்கட்சியினரே வெளிப்படையாக பேசி வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால், வேட்பாளர் மீது எதிர்ப்பு மற்றும் அதிருப்தி ஏற்பட்டவுடன் உடனடியாக வேட்பாளரை மாற்றுவார். தற்போதுள்ள கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், ஜெயலலிதா பாணியில் வேட்பாளரை மாற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினரிடையே நிலவுகிறது.

4 மாவட்டத்தில் ஒண்ணே ஒண்ணு தான் கூட்டணிக்கு கொடி பிடிக்கும் அதிமுக

தென் மாவட்டங்களை பொறுத்தவரை அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி தொகுதிகள் பாஜகவுக்கும், தென்காசி தொகுதி புதிய தமிழகத்திற்கும், விருதுநகர் தேமுதிகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. நெல்லை,  தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 5 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் அதிமுக போட்டியிடுகிறது.

 இதில் கன்னியாகுமரி தவிர தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மூன்று  தொகுதிகளிலும் அதிமுக சிட்டிங் எம்பிக்களாக உள்ளனர். கூட்டணி கட்சிகளுக்கு இந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால் மற்ற 4 தொகுதிகளுக்கும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு கொடி பிடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது  என்று அதிமுக தொண்டர்கள் புலம்புகின்றனர்.இதுகுறித்து கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், கடந்த முறை அதிமுக தனித்து வெற்றி பெற்ற தொகுதிகள் தற்போது கூட்டணிக்கு போய்விட்டது. ஒவ்வொரு நாளும் கூட்டணி கட்சியினரை எதிர்பார்த்தே தேர்தல்  பணிகளில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் அதிமுக தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: