கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியா வரும்..... ராகுலை யோசிக்க வைத்த பவார்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகள் தற்போது பா.ஜ வசம் உள்ளது. இதை மீண்டும் கைப்பற்ற காங்கிரசுடன் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி கடும் முயற்சி மேற்கொண்டது. ராகுலுக்கு விருப்பம் இருந்தாலும் டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் சட்டப்பேரவை தேர்தலை காரணம் காட்டி மறுத்து வருகிறார். இதனால் முடிவெடுக்க முடியாமல் ராகுல் தவிக்கிறார். காங்கிரசின் சக்தி ஆப் மூலம் கருத்து தெரிவித்த 52,000 தொண்டர்களும் இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் 2 கட்சிகள் இடையே சமரசம் செய்து டெல்லி மற்றும் அரியானாவில் கூட்டணி ஏற்படுத்தும் முயற்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் முயற்சி மேற்கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அவரை நேற்று ராகுல்காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் சந்தித்து பேசினர்.

அப்போது டெல்லி மற்றும் அரியானாவில் ஆம் ஆத்மியுடன் இணைந்து போட்டியிட்டால் 2 மாநிலங்களிலும் உள்ள 17 தொகுதிகளையும் கைப்பற்ற முடியும் என்று சரத்பவார் யோசனை தெரிவித்தார். இதை ராகுல் ஏற்றுள்ளார். இதையடுத்து ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் அங்கு விரைந்தார். அவரிடம் ராகுல் சம்மதம் குறித்து பவார் தெரிவித்தார். கெஜ்ரிவாலுடன் பேசி விரைவில் முடிவு அறிவிப்பதாக கூறினார். இதற்கிடையே இன்று நடைபெறும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் ஆம் ஆத்மி கூட்டணி முடிவு குறித்து ராகுல் கலந்து பேசி முடிவை அறிவிக்க இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜவுக்கு 35%

டெல்லியில் பா.ஜவுக்கு 35%ஓட்டு வங்கி இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் தெரிய வந்துள்ளது. அதே சமயம் காங்கிரசுக்கு 22, ஆம் ஆத்மிக்கு 28% ஓட்டு வங்கி உள்ளது. இருகட்சிகளும் இணைந்து செயல்பட்டால் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பா.ஜவிடம் இருந்து கைப்பற்றி விடலாம் என்று சரத்பவார் தெரிவித்த யோசனை ராகுலை சிந்திக்க வைத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: