குற்ற வழக்குகளில் தொடர்புடைய 750 பேர் சென்னையில் கைது: மக்களவை தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை!

சென்னை: மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்ற வழக்குகளில் தொடர்புடைய 750 பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல்  தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் ஆணையமும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில், சென்னை காவல்துறையின் கீழ் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 7,790 வாக்குச்சாவடிகள் உள்ளதாகவும், அதில் 450 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதுவரை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 4 கம்பெனி துணை ராணுவப்படையினர் சென்னை வந்துள்ளதாகவும், பிற மாநிலங்களில் நடைபெறவுள்ள முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், மேலும் 16 கம்பெனி துணை ராணுவப்படையினர் சென்னைக்கு வருவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 14 கட்சிகள் மீது 72 வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும், தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை சுமார் ரூ.10 லட்சம் ரொக்கமும் 4.5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 1230 பேர் உரிமம் பெற்ற தங்கள் துப்பாக்கிகளை ஒப்படைத்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் மக்களவை தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 750 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் அனைவரும் தகுந்த எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: