ஏடிஎம்களுக்கு கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

புதுடெல்லி: வங்கி ஏடிஎம்களுக்கு கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 10ம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அத்துடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலைக்குழு மற்றும் பறக்கும் படை என இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த இரு குழுக்களும் கடந்த 10 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு பணம் பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரை 6.75 கோடி பணம், எவர் சில்வர் பாத்திரங்கள், மது பாட்டில்கள், தங்கம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், நேற்றைய தினம் பூந்தமல்லி அருகேயுள்ள நசரத்பேட்டையில் வங்கி ஏடிஎம்-க்கு கொண்டுசெல்லப்பட்ட சுமார் ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. முறையான ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படை இந்த பணத்தை பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. இதனால், வங்கி ஏடிஎம்களுக்கு கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி மாவட்டந்தோறும் ஒவ்வொரு வங்கிக்கும் ஒருங்கிணைப்பாளர்களை நியமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அந்த ஒருங்கிணைப்பாளர் வங்கியிலிருந்து ஏடிஎம்க்கு கொண்டு செல்லப்படும் பணம் குறித்த விவரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். அதேபோல், தலைமை தேர்தல் அதிகாரிக்கும் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்தல் பறக்கும் படையினருக்கு தேர்தல் ஆணையம் தகவலளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி ஏடிஎம்களுக்கு கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுவது தடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: