குளத்தூர் பகுதியில் பருவமழை ஏமாற்றியதால் மிளகாய் வத்தல் விளைச்சல் பாதிப்பு

குளத்தூர்:  குளத்தூர் பகுதியில் பருவமழை ஏமாற்றியதால் மிளகாய் வத்தல் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் போதிய விலையின்றி விவசாயிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் சுற்றுவட்டார பகுதிகளான முத்துராமலிங்கபுரம், த.சுப்பையாபுரம், வீரபாண்டியபுரம், சக்கம்மாள்புரம், வேடநத்தம், வெங்கடாசலபுரம், முத்துக்குமரபுரம், புளியங்குளம், பூசனூர், கெச்சிலாபுரம், வைப்பார், இ.வேலாயுதபுரம், சூரங்குடி, பனையூர், வேப்பலோடை, கல்மேடு ஆகிய கிராமங்களில் கடந்த வடகிழக்கு பருவமழையையொட்டி விவசாயிகள் கம்பு, சோளம், வெங்காயம், மிளகாய் போன்றவை விதைத்து விவசாய பணி மேற்கொண்டனர். பெரும்பாலான விவசாயிகள் மிளகாய் பயிரிட்டனர்.

ஆரம்பத்தில் இருந்த பருவமழையின் தீவிரம் தொடர்ந்து பெய்யாமல் பொய்த்ததால் பாதி முளைத்த நிலையில் பயிர்கள் தண்ணீரின்றி கருகின. இதனால் கருகிய மிளகாய் செடிகளை அகற்றி விட்டு மேலும் கடன்களை வாங்கி புதிய மிளகாய் நாற்றுகளை வாங்கி நட்டனர். டிராக்டர் தண்ணீரை விலைக்கு வாங்கி விவசாயப் பணிகளை மேற்கொண்டனர். ஆனால் மழை பெய்யாமல் கானல் நீராகிப்போனதால் விவசாயிகள் நட்டுவைத்த மிளகாய் நாற்றுகள் விளைச்சல் இல்லாமல் போயின. இந்நிலையில் கடந்த ஒருமாத காலமாக குளத்தூர் பகுதியில் மிளகாய் செடிகளில் மிளகாய் பழங்களை பறித்து களங்களில் உலர வைக்கும் பணி தீவிரமாக உள்ளது. கடந்த வருடங்களில் இருந்த விளைச்சலில் இந்த வருடம் பாதிகூட விளைச்சல் இல்லாமல்  சண்டல் வத்தலாக காணப்படுவதுடன் போதிய விலையும் இல்லை.

இதுகுறித்து அப்பகுதி விவசாயி அருஞ்சுனை கனி கூறியதாவது: கடந்த வருட பருவ மழையின் தீவிரத்தை கணக்கில் கொண்டு இந்த வருடம் விவசாயம் நன்றாக இருக்கும் என மிளகாய், வெங்காயம், கம்பு போன்ற மானாவாரி பயிர்களை விதைத்து ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவழித்து  விவசாயப்பணி மேற்கொண்டோம். ஆனால் பருவமழை தொடர்ச்சியாக பெய்யாமல் இப்பகுதி விவசாயிகளை கைவிட்டது. மேலும் விதைத்த பயிர்களை எப்படியாவது கரை சேர்த்து விடுவது என கையிலிருந்த பணம் போக வட்டிக்கு பணம் பெற்று காய்ந்து சகாய் போன மிளகாய் நாற்றுகளுக்கு பதிலாக புதிய நாற்றுகளை நட்டுவித்து மழை பெய்யும் என நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால் அதுவும் ஏமாற்றமே மிச்சமானது.

மேலும் விலைக்கு டிராக்டர் தண்ணீரை வாங்கி விவசாயப்பணிகளை மேற்கொண்டோம் ஆனால் கடந்த மாதம் வெம்பாவின் தாக்கத்தால் ஓரளவு விளைந்த வத்தலும் சோடை வத்தலாக போனது. இதனால் கடந்த வருடம் குவிண்டால் ரூ.16 ஆயிரத்திற்கு சென்ற மிளகாய் வத்தல் இந்த வருடம் ரூ.6 ஆயிரத்திற்கும் குறைவாகவே செல்கிறது. இதனால் ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் செலவழித்து வட்டி செலுத்த முடியாமல் போனதுதான் மிச்சம். இவ்வாறு அவர் கூறினார்.  எனவே, இப்பகுதி விவசாயிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு பயிர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்வதோடு விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: