பிரபல தயாரிப்பாளர் வீடு புகுந்து தாக்குதல்: ஜோதிகா பட இயக்குநர் மீது போலீசில் புகார்

திருவனந்தபுரம்: பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர் வீட்டுக்குள் அடியாட்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தியதாக ஜோதிகா பட இயக்குநர் மீது போலீசில்  புகார் கூறப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ரோஷன் ஆன்ட்ரூஸ். இவர் மலையாளத்தில் உதயனாணுதாரம், ஹவ் ஓல்ட் ஆர் யு, காயங்குளம் கொச்சுண்ணி, மும்பை போலீஸ் உள்பட ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தமிழில் ஜோதிகாவை வைத்து 36 வயதினிலே என்ற படத்தையும் இயக்கினார்.இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் இவர் மலையாள சினிமா தயாரிப்பாளர் ஆல்வின் ஆன்றனி வீட்டுக்குள் அடியாட்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தியதாக எர்ணாகுளம் தெற்கு போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூஸ் கூறியது: தயாரிப்பாளர் ஆல்வின் ஆன்றனியின் மகன் ஆல்வின் ஜாண் ஆன்றனி என்னிடம் உதவி இயக்குநராக இருந்தார்.  அவருக்கு போதை பழக்கம் இருந்தது. பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. இதனால் அவரை உதவி இயக்குநரில் இருந்து நீக்கி விட்டேன். அதன்பிறகு என்னை  பற்றி அவர் பொய் தகவல்களை பரப்பி வந்தார். இது குறித்து கேட்பதற்காக நானும், எனது நண்பர் நவாசும் அவரது வீட்டுக்கு சென்றோம். அப்போது ஆல்வின் ஜாண் ஆன்றனி, அவரது தந்தை, அவரது கூட்டாளிகள் சேர்ந்து என்னையும், நவாசையும் தாக்கினர். இதில் நவாசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஆல்வின் ஆன்றனி, அவரது நண்பர் பினோய் ஆகியோர் மீது போலீசில் புகார் செய்துள்ளேன் என கூறினார்.

இது குறித்து ஆல்வின் ஜாண் ஆன்றனி கூறியது: நான் இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூசிடம் ஹவ் ஓல்ட் ஆர் யு மற்றும் மும்பை போலீஸ் ஆகிய 2 படங்களில் உதவி  இயக்குநராக பணி புரிந்துள்ளேன். நான் எனது தந்தையுடன் கொச்சி பனம்பிள்ளி நகரில் வசித்து வருகிறேன். வீட்டில் பெற்றோருடன் எனது 12 வயது தங்கையும் உள்ளார்.  கடந்த இரு தினங்களுக்கு முன் ரோஷன் ஆன்ட்ரூஸ் 40 அடியாட்களுடன் வந்து வீட்டுக்குள் புகுந்து தாக்கினார். எனது தாயை பிடித்து கீழே தள்ளினார்.

நான் போதைப் பொருள் பயன்படுத்துவதாக அவர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. எனது தந்தை சமூகத்தில் செல்வாக்குடன் உள்ளார். நான் போதைப் பொருள்  பயன்படுத்தினால் என்னை அவர் எப்போதோ வீட்டைவிட்டு வெளியேற்றி இருப்பார்.

எனக்கும் ரோஷன் ஆன்ட்ரூசுக்கும் ஒரு பொதுவான பெண் நண்பர் உண்டு. அந்த பெண் நண்பருடன் நான் பழகுவது அவருக்கு பிடிக்கவில்லை. என்ைன அவர் பலமுறை  எச்சரித்தார். ஆனாலும் தொடர்ந்து நான் அவருடன் பழகினேன். இதை பொறுக்காமல் தான் எனது வீட்டுக்குள் புகுந்து தாக்கியுள்ளார். இது குறித்து எர்ணாகுளம் தெற்கு  போலீசில் புகார் செய்துள்ளோம் என கூறினார். இதற்கிடையே இயக்குநர் ரோஷன் ஆன்ட்ரூசுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் மற்றும் மலையாள சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் நேற்று கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ராவிடம் புகார் அளித்துள்ளனர். கேரளாவில் பிரபல இயக்குநர் - தயாரிப்பாளர் இடையே மோதல் ஏற்பட்டிருப்பது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: