திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறைகள் ஒதுக்கீடு சர்வரில் திடீர் கோளாறு: பக்தர்கள் கடும் அவதி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் ₹50 முதல் ₹7,500 வரை வாடகைக்கு  அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதற்காக சிஆர்ஓ அலுவலகம், எம்பிசி அலுவலகம், பத்மாவதி விசாரணை மையம் ஆகிய 3 இடங்களில் அலுவலகம் உள்ளது.  அறைகள் காலியான விவரம் ஆன்லைன் மூலமாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக பக்தர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   தினந்தோறும் காலை 6 மணி முதல் அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக பக்தர்கள் அதிகாலை 4 மணி முதலே வரிசையில் காத்திருப்பது வழக்கம்.

அதன்படி நேற்றும் அதிகாலை முதலே பக்தர்கள் காத்திருந்தனர். ஆனால் அறைகள் ஒதுக்கீடு செய்யக்கூடிய சர்வரில் திடீரென பழுது ஏற்பட்டது.

இதனால் பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து சர்வரை சரிசெய்யும் பணி நடந்தது. 7.30 மணியளவில் சர்வர் சரி செய்யப்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு மீண்டும் அறைகள் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. இதுகுறித்து இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு கூறுகையில், `தேவஸ்தானம் சார்பில் அதிநவீன உயர் தொழில்நுட்பத்துடன் சர்வர் மேம்படுத்தப்பட்டு சேவை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை சர்வரில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், அறைகள் ஒதுக்கீடு செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் சிறிது சிரமத்திற்குள்ளாகினர். இருப்பினும் 7.30 மணி முதல் சர்வர் சரி செய்யப்பட்டு பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மீண்டும் இது போன்ற பிரச்னை ஏற்படாத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தொழில் நுட்ப ரீதியாக சிரமம் ஏற்பட்டால் மாற்று வழியில் அறைகள் ஒதுக்கீடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: