மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து சபாநாயகர் பிரமோத் சாவந்த் கோவா முதல்வராக தேர்வு

பனாஜி: மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் கோவா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக பாரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை  பெற்று வந்தார். டெல்லி,  மும்பையில் சிகிச்சை பெற்ற அவர், அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு நாடு திரும்பினார். இதன்பின் அரசு நிர்வாகத்தை கவனித்த பாரிக்கர், மூக்கில் சுவாச உதவி உபகரணங்களுடன்  மாநில சட்டப்பேரவையில்  பட்ஜெட் தாக்கல் செய்து மிகவும் சிரமப்பட்டு உரையாற்றினார். தன்னை முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு கட்சி தலைமையிடம் வலியுறுத்தியும் அவர் மாற்றப்படவில்லை. அதன்பிறகும்  அவர் தொடர் சிகிச்சையில்  இருந்ததால், அரசு நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது.

இந்நிலையில், தலைநகர் பனாஜி அருகேயுள்ள டோனா பவுலாவில் உள்ள வீட்டில் தங்கியிருந்த பாரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதாகவும், டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கோவா   முதல்வர் அலுவலகம் டிவிட்டரில் நேற்று மாலை தகவல் வெளியானது. அடுத்த சில மணி நேரங்களில், மாலை 6.40 மணிக்கு பாரிக்கர் சிகிச்சை பலனின்றி காலமானார்.  இதனை தொடர்ந்து கோவா முதல்வர் மனோகர்  பாரிக்கர் உடல் முழு அரசு  மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன், கோவாவில் பாஜ எம்எல்ஏ பிரான்சிஸ் டிசோசா இறந்ததைத் தொடர்ந்து ஆளும் பாஜவுக்கு தனிப்பெரும்பான்மை குறைந்தது. பாஜ எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 13 ஆக குறைந்தது.  தற்போது பாரிக்கரும் காலமானதைத் தொடர்ந்து, பாஜவின் பலம் 12 ஆக சரிந்துள்ளது. ஏற்கனவே, 14 எம்எல்ஏக்களை கொண்டுள்ள காங்கிரஸ், தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரை சந்தித்து கடிதம்  கொடுத்துள்ளது. மேலும், கோவா ஆளுநர் மிருதுளாவை சந்தித்து கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று உரிமை கோரியது. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில்  நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், பேட்டியளித்த கோவா மாநில பாஜக தலைவர் வினோ டெண்டுல்கர், கோவா சட்டப்பேரவை சபாநாயகர் பிரமோத் சாவந்த் அடுத்த கோவா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: