கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது: பொதுமக்கள் திரளாக பங்கேற்பு

பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கடந்த சில மாதங்களாக பாரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். டெல்லி,  மும்பையில் சிகிச்சை பெற்ற அவர், அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு நாடு திரும்பினார். இதன்பின் அரசு நிர்வாகத்தை கவனித்த பாரிக்கர், மூக்கில் சுவாச உதவி உபகரணங்களுடன் மாநில சட்டப்பேரவையில்  பட்ஜெட் தாக்கல் செய்து மிகவும் சிரமப்பட்டு உரையாற்றினார். தன்னை முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு கட்சி தலைமையிடம் வலியுறுத்தியும் அவர் மாற்றப்படவில்லை. அதன்பிறகும் அவர் தொடர் சிகிச்சையில்  இருந்ததால், அரசு நிர்வாகப் பணிகள் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது. இதற்கிடையே, கூட்டணிக் கட்சி தலைவரும் அமைச்சருமான விஜய் சர்தேசாய் நேற்று முன்தினம் முதல்வர் பாரிக்கரை  அவரது இல்லத்தில் சந்தித்தார். அதன்பின் பேட்டி அளித்த அவர், ‘‘பாரிக்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது’’ என தெரிவித்தார். பாரிக்கரின் உடல்நிலை தேற இனியும் வாய்ப்பில்லை என டாக்டர்கள்  தெரிவித்ததைத் தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கையை பாஜ மேலிடம் மேற்கொள்ளத் தொடங்கியது.

இந்நிலையில், தலைநகர் பனாஜி அருகேயுள்ள டோனா பவுலாவில் உள்ள வீட்டில் தங்கியிருந்த பாரிக்கரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதாகவும், டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் கோவா  முதல்வர் அலுவலகம் டிவிட்டரில் நேற்று மாலை தகவல் வெளியானது. அடுத்த சில மணி நேரங்களில், மாலை 6.40 மணிக்கு பாரிக்கர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 63. இவர் 4 முறை கோவா முதல்வராக  பதவி வகித்துள்ளார். கடந்த 2012ல் கோவா முதல்வராக பதவியேற்ற பாரிக்கர், 2014ல் மத்தியில் பாஜ தலைமையிலான ஆட்சி அமைந்ததும் பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இவரது தலைமையின் கீழ் 2016ல்  இந்திய ராணுவம், எல்லைத்தாண்டி சென்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்கல் நடத்தியது. ரபேல் போர் விமான ஒப்பந்தமும், பாரிக்கரின் பதவிக் காலத்திலேயே கையெழுத்தானது. பின்னர்,  2017ல் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து விலகிய அவர் கோவா முதல்வராக பொறுப்பேற்றார். பாரிக்கரின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள்  இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மனோகர் பாரிக்கரின்  இறுதி சடங்கு தலைநகர் பனாஜியில் நடைபெற்றுது, இறுதிச்சடங்கில் கட்சி தலைவர்கள், பாஜக தலைவர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றுள்ளனர். இதனை தொடர்ந்து கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் முழு அரசு  மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: