தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணம் இல்லாமல் ரூ.6.77 கோடி பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு

சென்னை :  மக்களவை மற்றும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு என்ன ஏற்பாடுகள் செய்யவேண்டும், குறிப்பாக தேர்தல் அன்று மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும், வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு வாக்கு எண்ணிக்கை குறித்த ஏற்பாடுகள் பற்றியும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வேட்பாளர்கள் மேற்கொள்ளக்கூடிய செலவுகளை கண்காணிப்பதற்காக தேர்தல் செலவின பார்வையாளர்கள் நாளை தமிழகம் வரவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல தேர்தல் பார்வையாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் கடைசி தேதியில்(26.03.2019) வருகை தருவார்கள் எனக் கூறினார். இந்த தகவலைகள் அனைத்தையும் டி.இ.ஓ மற்றும் எஸ்.பி அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி 6 கொடியே 77 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்தும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதாக அவர் தெரிவித்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து, இதுவரை 1,48,206 தேர்தல் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இதுவரை 6 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் திருத்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என அவர் தெரிவித்தார். தேர்தலையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 2,111 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: