நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவு

சென்னை: ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் 1991 முதல் 1996 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ராஜகண்ணப்பன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். இதனிடையே அதிமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக பிரிந்த ராஜகண்ணப்பன், மக்கள் தமிழ் தேசம் என்ற தனி கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சியை 10 வருடங்களாக நடத்தி வந்த அவர், பின்னர் மீண்டும் அதிமுகவுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றி வந்தார்.

2009ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு ப.சிதம்பரத்திடம் இவர் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில்  தோல்வியடைந்தார். இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அதிமுகவில் இருந்து ராஜகண்ணப்பன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சிவகங்கை அல்லது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கோரியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த இரு தொகுதிகளும் கூட்டணி கட்சியான பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, அவரை வேட்பாளராக தேர்தெடுக்கப்படாததால், விரக்தியடைந்த அவர், தான் அதிமுகவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மேலும், திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சென்று சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: