ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட சர்ச்சையில் ஸ்ரீசாந்த்துக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தடை நீக்கம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ஸ்பாட் பிக்சிங் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியதால் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த்துக்கு பிசிசிஐ விதித்த ஆயுள் தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது, ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வேகப் பந்துவீச்சாளர் எஸ்.ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கித் சவான் ஆகிய வீரர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை முடிவில், 2015ம் ஆண்டு ஸ்ரீசாந்த் குற்றமற்றவர் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து தனது வாழ்நாள் தடையை நீக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த நீதிமன்றம் தடையை நீக்க மறுத்துவிட்டது. பின்னர் அவர் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதி, தடையை ரத்து செய்தார். இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை தொடரும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் அப்பீல் செய்தார். இந்த வழக்கு கடந்த டிசம்பரில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீசாந்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித், ‘ஸ்ரீசாந்துக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தடை அதிகப்படியானது. இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட அவருக்கு அழைப்பு வந்திருக்கிறது. ‘ஸ்பாட் பிக்சிங்’ புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதினுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் தடை விடுவிக்கப்பட்டது. அவரை ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் போட்டியிட இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கிறது. ஆனால் ஸ்ரீசாந்துக்கு மட்டும் அனுமதி மறுப்பது என்ன நியாயம்’ என்று கேட்டார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி மூன்றாவது வாரத்துக்கு நீதிமன்றம் தள்ளி வைத்த நிலையில், இன்று நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம்.ஜோசப் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவில், ‘ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கப்படுகிறது. அவர், தொடர்ந்து விளையாடுவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் 3 மாதங்களுக்குள்ளாக முடிவு செய்து கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டது. தற்போது உச்ச நீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கியதால், அவர் மீண்டும் களமிறங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: