கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு எதிரொலி: நாளை தொடங்கவிருந்த நியூசிலாந்து-வங்கதேசம் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ரத்து

வெல்லிங்டன்: துப்பாக்கிசூடு காரணமாக நாளை தொடங்கவிருந்த நியூசிலாந்து-வங்கதேசம் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில், ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதி உள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால், இங்கு சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வரும் வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்களில் சிலரும் அப்பகுதிக்கு தொழுகை நடத்த சென்றனர். ஓட்டலில் இருந்து அவர்கள் ஒரு பேருந்தில் சென்றுள்ளனர். அதிலிருந்து இறங்கி, மசூதியின் உள்ளே நுழைந்தபோது, அருகில் பயங்கரமாக துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. மர்மநபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில், இதுவரை 6 பேர் பலியாகினர், பலர் படுகாயமடைந்தனர். இதைக்கண்ட பங்களாதேஷ் வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். பதறிய அவர்கள் உடனடியாக தரையில் படுக்க வைக்கப்பட்டனர்.

பின்னர், அங்கிருந்து பத்திரமாக ஓட்டல் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அந்தப் பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நல்லவேளையாக கிரிக்கெட் வீரர்கள் தொழுகை நடத்திய மசூதியில் துப்பாக்கிச்சூடு இல்லை என்பதால் அதிர்ஷ்டவசமாக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் உயிர்தப்பினர். இந்நிலையில் நியூசிலாந்து-வங்கதேச அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நாளை தொடங்கவிருந்தது. ஆனால், அங்குள்ள மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூடு காரணமாக, இரு நாட்டு கிரிக்கெட் போர்டும் பேச்சுவார்த்தை நடத்தியதில் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கதேச வீரர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுப்பயணத்தில் இதுவரை நடைபெற்ற மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வங்கதேச அணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: