போயிங் 737 மேக்ஸ் தடையால் கட்டணம் 100%க்கு மேல் உயர்வு

புதுடெல்லி: போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களுக்கு தடை விதித்ததால், விமான கட்டணங்கள் 100 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து விட்டது. போயிங் 737 மேக்ஸ் ரக விமானம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 189 பயணிகள் இறந்தனர். இதுபோல், எத்தியோபிய  தலைநகரில் இருந்து புறப்பட்ட இதே ரக விமானம் சில நாட்கள் முன்பு விபத்துக்கு ஆளானது. இதில் 4 இந்தியர் உட்பட 157 பேர் இறந்தனர். ஐந்து மாதங்களில் 2வது பெரிய விபத்து இது.  இதனால், போயிங் 737 மேக்ஸ் ரக  விமானங்களை இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தடை செய்து விட்டன. இந்தியாவில் இந்த தடை நேற்று முன்தினம் மாலை 4 மணியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இதை நம்பியிருந்த பயணிகள் வேறு விமானங்களில்  டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய நிலைக்கு வந்து விட்டனர். உதாரணமாக, மும்பை ஜெய்ப்பூர் இடையே டிக்கெட்கள் வரும் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு விட்டன.

 மும்பை - சென்னை இடையே கட்டணம் 100 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து விட்டது.  இந்த வழித்தடத்தில் கடந்த ஆண்டு இதே மாதம் டிக்கெட் விலை ₹5,369ஆக இருந்தது. இது தற்போது ₹26,073ஆகியுள்ளது.  போயிங் விமானங்களுக்கு தடை மட்டுமின்றி, நிலுவை தொகை செலுத்தாதது, உதிரி பாகம் கிடைக்காமல் பழுதானவை என சுமார் 50 விமானங்கள் இயக்கப்படவில்லை. கடைசி நேர டிக்கெட் புக்கிங்குகளுக்கு அடிதடி ஏற்படாத  குறைதான். எனவே சில நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்துக்கு டிக்கெட் விலையை உயர்த்தி விட்டன.  இதுகுறித்து சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் சிலர் கூறியதாவது: சுற்றுலா திட்டத்தில் பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. இதற்கேற்ப பேக்கேஜிங் கட்டணங்கள் உள்ளன. ஆனால்  போயிங் 737 ரக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், டிக்கெட் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: