பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டு உள்ள நிலையில் தனியார் துப்புரவு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் 6 மாதத்துக்கு நீட்டிப்பு: மாநகராட்சி முடிவு; ஊழியர்கள் அதிருப்தி

சென்னை: அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மூன்று மண்டலங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கு தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. இந்த மண்டலங்களில் தினசரி 5000 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இந்நிலையில் துப்புரவு பணிகளை தனியாரிடம் கொடுக்க மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய 3 மண்டல துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது.  இந்த தனியார் நிறுவனமானது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை விடுவித்து, வேறு புதிய நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட ஒப்பந்தமானது அடுத்த மாதத்துடன் முடிவடைகிறது.

இதனைத்தொடர்ந்து புதிய நிறுவனத்தை தேர்வு செய்யும் பணிகளை மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்குள் முடிக்க முடியாது என்பதால் ஒப்பந்த காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதம் வரையில் இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்கள் கூறுகையில், ‘‘அடையாறு, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய 3 மண்டலங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம் பணிகளை மேற்கொள்ளாமலேயே பணியை செய்ததாக முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இந்த நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் போராடி வருகிறோம். தற்போது மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு இதே நிறுவனத்துக்கு ஒப்பந்த பணிகளை மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இது கண்டிக்கத்தக்கது,’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: