வாங்கிய நாள் முதலே கோளாறு பைக் நிறுவனத்துக்கு ரூ.55 ஆயிரம் அபராதம்

சென்னை: குறைபாடு உள்ள பைக்கை விற்பனை செய்த நிறுவனத்துக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர், கடந்த 2015ம் ஆண்டு புது பைக் ஒன்றை ரூ.84 ஆயிரத்து 500க்கு வாங்கியுள்ளார். அப்போது பைக் நிறுவனம் சார்பில் ஒரு வருடம் வாரண்டி கொடுத்துள்ளனர். இந்நிலையில், பைக் வாங்கிய நாளில் இருந்தே சரியாக இயங்காமலும், நடுவழியில் நிற்பதும் என பல்வேறு பிரச்னைகளை கொடுத்து வந்துள்ளது. இதுபற்றி அளித்த புகாரின் பேரில், பைக் நிறுவனத்தின் இன்ஜினியர் பழுதை சரிசெய்து கொடுத்துள்ளார்.

ஆனால், சில நாட்களில் எப்போதும்போல் பழுதாகியது. மீண்டும் பைக்கை பரிசோதனை செய்த சர்வீஸ் இன்ஜினியர், பைக் தயார் செய்யப்பட்ட போது இருந்தே இந்த பிரச்னை இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சீனிவாசன், ரூ.3 லட்சம் இழப்பீடு கோரி பைக் நிறுவனத்தின் மீது சென்னையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி லட்சுமிகாந்தன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பைக் நிறுவனம் தயாரிப்பில் குறைபாடுள்ள வாகனத்தை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாகவும், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கவும், பைக் நிறுவனத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: