வாக்காளர் அடையாள அட்டை அச்சிட பிளாஸ்டிக் அட்டை ஸ்டாக் இல்லை: 2 வாரமாக அலைகழிக்கப்படும் பொதுமக்கள்

சென்னை: புதிய வாக்காளர் அடையாள அட்டை அச்சிட பிளாஸ்டிக் அட்டை ஸ்டாக் இல்லை என்பதால் கடந்த 2 வாரங்களாக பொதுமக்கள் மாநகராட்சி சேவை மையத்தால் அலைகழிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் வாக்களார் பட்டியல் சுருக்க திருத்த பணி கடந்த சில மாதமாக நடைபெற்றது,   இதன்படி சென்னை மாநகராட்சியில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 1 லட்சத்து 16 ஆயிரத்து 385 விண்ணப்பித்திருந்தனர். இதில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 104 மனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன. மேலும் ஊழியர்களின் கள ஆய்வின் போது 4,371 பெயர்களும், தகுதியின்மை அடிப்படையில் 79,860 பெயர்களும் நீக்கப்பட்டன. தற்போதிய நிலைப்படி சென்னை மாநகராட்சியில் 38 லட்சத்து 18 ஆயிரத்து 999 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் புதிதாக பெயர் சேர்த்தவர்கள், முகவரி மற்றும் பல்வேறு தகவல்களை மாற்றியவர்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி  மண்டல அலுவலகங்களில் நடைபெற்றுவருகிறது. ஆனால் சில நாட்களாக வாக்காளர் அடையாள அட்டை அச்சிட தேவையான பிளாஸ்டிக் அட்டை ஸ்டாக் இல்லை எனக் கூறி கடந்த 2 வாரங்களாக இசேவை மையத்தால் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது ெதாடர்பாக அவர்கள் கூறியதாவது: நான் மந்தவெளி பகுதியில் வசித்து வருகிறேன். வாக்காளர் அட்டையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்ய விண்ணப்பித்திருந்தேன். எனது விண்ணப்பம் ஏற்கப்பட்டு முகவரி மாறிய பிறகு புதிய அட்டை பெறுவதற்காக இ சேவை மையத்திற்கு சென்றேன். அந்த மைய ஊழியர்கள் இனிமேல் மாநகராட்சியின் மண்டல அலுவலகத்தில் மட்டுமே வாக்காளர் அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எனது பகுதிக்கும் உட்பட்ட அடையாறு மண்டல அலுவலகத்திற்கு சென்றேன். முதல் நாள் சென்ற போது சிலருக்கு மட்டுமே டோக்கன் கொடுத்து அவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை வழங்கினர். அடுத்த நாளும் இதேப் போன்றுதான் செய்தார்கள். மூன்றாவது நாள் சென்ற போது வாக்காளர் அடையாள அட்டைக்கான பிளாஸ்டிக் அட்டை ஸ்டாக் இல்லை. இரண்டு வாரம் கழித்து வாருங்கள் என்று தெரிவித்தார்கள். தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் பொதுமக்களை அலைக்கழித்து வருகிறார்கள்.  தற்போது இரண்டு வாரம் கழித்து வர சொல்கிறார்கள். மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு உடனடியாக  இதை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: