ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சிடி வெளியிட்ட சமூக செயற்பாட்டாளர் எழும்பூரில் மாயம்: ரயில்வே போலீசில் புகார்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மறைக்கப்பட்ட உண்மைகள் என்ற தலைப்பில் சிடி வெளியிட்ட சமூகசெயற்பாட்டாளர் எழும்பூர் ரயில்நிலையம் வந்த நிலையில் மாயமானார். இதையடுத்து தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் நேற்று எழும்பூர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பினர் நேற்று எழும்பூர் ரயில்வே போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் முகிலன் கடந்த 15ம் தேதியன்று கொளுத்தியது யார்? ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ற தலைப்பில் சென்னையில் பத்திரிகையாளரை சந்தித்து அறிக்கையாகவும், சிடியாகவும் வெளியிட்டார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வன்முறைக்கும், மக்களுக்கு எந்த விமான தொடர்பும் இல்லை ஐஜி, டிஐஜி, எஸ்பி மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகளின் தலைமையில் தான் வன்முறை நடந்தது என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். மேலும் இதை வெளியிடுவதால் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் சில நாட்களுக்கு முன்பு அவரை கொலை செய்யவும் முயற்சி நடந்தது என்றும் தெரிவித்திருந்தார்.

 இந்நிலையில் பத்திரிகையாளரை சந்தித்து விட்டு 15ம் தேதி இரவு 10.30 மணியளவில் எழும்பூர் ரயில்நிலையத்திற்கு வந்து மதுரைக்கு செல்வதற்காக டிக்கெட் எடுத்துள்ளார். அதன்பிறகு அவரை காணவில்லை செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ஆகவே முகிலன் என்ன ஆனார் என்று தெரியவில்லை. இது சமூக செயற்பாட்டாளர்கள், மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இன்று ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. இந்தநிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடைபெற்ற படுகொலைகள் குறித்தும், மறைக்கப்பட்ட உண்மைகள் குறித்தும் வெளியிட்டுள்ளதால் ஸ்டெர்லைட் ஆலைக்கு சம்பந்தப்பட்டவர்கள் யாரேனும் அவரை கடத்தியுள்ளனரா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டு பிடித்து தர வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: