அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தலைமை ஸ்தபதி இல்லாததால் திருப்பணிக்கு ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல்

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரம் கோயில்களின் திருப்பணிக்கு மாநில அளவிலான கமிட்டி ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால், அந்த கோயில்களில் திருப்பணி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 40 ஆயிரத்து 190 கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கொரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, 12 ஆண்டுகளாகியும் கும்பாபிஷேகம் நடத்தப்படாத கோயில்களை கண்டறிந்து, அந்த கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 1,000 கோயில்கள் வரை தேர்வு செய்யப்பட்டு, அந்த கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2011 முதல் 2018 மார்ச் 31ம் தேதி வரை 10,566 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. குறிப்பாக, கடந்த 2017-18ல் மட்டும் 765 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில், இந்தாண்டு 1000 ஆயிரம் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முடிவு செய்தது. இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் தலைமை ஸ்தபதியிடம் ஒப்புதல் பெற வேண்டும். தற்போது தலைமை ஸ்தபதி பணியிடம் காலியாக உள்ளது. அந்த பணியிடங்களுக்கு பதிலாக மாநில அளவிலான கமிட்டி ஒன்று அமைத்து ஐகோர்ட் பரிந்துரை செய்தது. இந்த கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடுகிறது.

அந்த கூட்டத்தில் திருப்பணி நடைபெறவுள்ள கோயில்களுக்கு அந்த கமிட்டியிடம் ஒப்புதல் பெறுவதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் அறிக்கை சமர்பிக்கப்படுகிறது. அந்த குழுவினர் என்னென்ன திருப்பணி நடக்கவுள்ளது என்பதை ஆய்வு செய்து, அந்த அறிக்கைக்கு ஒப்புதல் தர வேண்டும். ஆனால், அந்த கமிட்டியினர் பல்வேறு காரணங்களை கூறி திருப்பணிக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஆயிரம் கோயில்களில் தற்போது வரை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் தகுதியான புதிய தலைமை ஸ்தபதியை நியமனம் செய்து கோயில்களில் திருப்பணியை நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறும் போது, தலைமை ஸ்தபதி புதிதாக நியமிக்க அறநிலையத்துறை தலைமை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ெபரும்பாலான கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக புதிதாக தலைமை ஸ்தபதி ஒருவரை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: