பிளாஸ்டிக் நிறுவனத்தை ‘இ-வே’ பில் மூலம் அடையாளம் காண திட்டம்: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முடிவு

சென்னை: தமிழகத்தில், ‘பிளாஸ்டிக்’ தயாரிக்கும் நிறுவனங்களை, ‘இ-வே’ பில் மூலமாக அடையாளம் காணும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. அதற்காக, மாசுக்காட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தற்போது தயாராகி வருகின்றனர். தினசரி பயன்படுத்தப்படும் ‘பிளாஸ்டிக்’ பைகளால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இயற்கை வளங்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. மேலும் மனிதர்களுக்கும் உடல்ரீதியிலான தொந்தரவும் அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்தும் ேநாக்கில், கடந்த ஜனவரி, 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் ‘பிளாஸ்டிக்’ பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் அரசு தடை விதித்துள்ளது. மேலும், பிளாஸ்டிக் விற்பனை கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தடையை மீறுவோர் மீது அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மாநிலம் முழுவதும், 174 நிறுவனங்கள் ‘பிளாஸ்டிக்’ தயாரிப்பில் ஈடுபட்டு வருவது தெரியவந்ததையடுத்து, அந்த நிறுவனங்களுக்கு பைகளை தயாரிக்கக்கூடாது என அறிவுறுத்தி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் வழங்கியது. இதனால் தமிழகத்தில் ‘பிளாஸ்டிக்’ பயன்பாடு ஓரளவிற்கு குறைந்துள்ளது. இருப்பினும் மாநிலத்தில் ஒருசில இடங்களில் மறைமுகமாக ‘பிளாஸ்டிக்’ பைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதைக்கட்டுப்படுத்தும் வகையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், ‘இ-வே’ பில் மூலமாக சம்மந்தப்பட்ட நிறுவனங்களை அடையாளம் காண திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நடைமுறைக்கும் வரும் பட்சத்தில், ‘பிளாஸ்டிக்’கை தயாரித்து வரும் நிறுவனங்கள் அனைத்தும் சிக்கிக்கொள்ளும். இதனால், மறைமுமாக ‘பிளாஸ்டிக்’ தயாரிப்பில் ஈடுபட்டு வருவோர் பீதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஆண்டு, ‘இ-வே’ பில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் ஒருமாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு, 50 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய பொருட்களை எடுத்துச்செல்லும் போது, ஜிஎஸ்டி சட்டப்பிரிவு 68ன் கீழ் ‘இ-வே’ பில் பெற வேண்டும். அவ்வாறு பெறும் போது அதில் என்ன பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட பொருளை தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர்?; அதன் எடை எவ்வளவு?; எங்கிருந்து எங்கு கொண்டுசெல்லப்படுகிறது?; நிறுவனத்தின் உரிமையாளரின் பெயர் போன்ற அனைத்து விபரங்களும் இடம்பெறும் என்ற சூழ்நிலை உள்ளது. எனவே ‘பிளாஸ்டிக்’ தயாரிக்கும் நிறுவனங்கள், அதை விற்பனை செய்யும் போது ‘இ-வே’ பில் எடுக்க வேண்டிய சூழல் உருவாகும். அப்போது சம்மந்தப்பட்ட விபரங்களை அதில் குறிப்பிட வேண்டும். அப்போது மத்திய அரசிடம், ‘பிளாஸ்டிக்’ தயாரிக்கும் நிறுவனங்கள் எளிதாக சிக்கிக்கொள்ளும். பிறகு அந்த நிறுவனங்கள் குறித்த விபரம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரிவிக்கும். பிறகு அவ்வாறு தெரிவிப்பதன் மூலம் நேரடியாக நிறுவனம் இருக்கும் இடத்திற்கு சென்று மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். இதனால் மாநிலம் முழுவதும் ‘பிளாஸ்டிக்’ தயாரிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: