புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

அமிர்தசரஸ்: புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங்  அறிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமா மாவட்டம், அவந்திப்போரா பகுதியில் துணை ராணுவ வீரர்கள் கடந்த 14-ம்  தேதி 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி வெடிகுண்டு ஏற்றிய சொகுசு காரை  கொண்டு மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனம்  தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள், சினிமா பிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி செய்து வருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பலியான வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு சார்பில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, புல்வாமா தாக்குதலில் பலியான பஞ்சாப் மாநிலம், அனந்பூர் சாஹிப் பகுதியை சேர்ந்த வீரப் குல்விந்தர் சிங் இல்லத்துக்கு இன்று சென்ற  பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங், அவரது பெற்றோர் மற்றும் மனைவியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இன்றைய சந்திப்புக்கு பின்னர் குல்விந்தர் சிங்கின் வாரிசு (மனைவி அல்லது பெற்றோர் இறக்கும்வரை) அவர்களுக்கு மாதந்தோறும் அரசின் சார்பில் 10 ஆயிரம்  ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார். மேலும், அனந்த்புர் சாஹிப் நகரில் இருந்து குல்விந்தர் சிங் வாழ்ந்த கிராமத்தை  இணைக்கும் சாலைக்கு அவரது நினைவாக குல்விந்தர் சிங் சாலை என பெயரிடப்படும் எனவும் முதல்வர் அமரிந்தர் சிங் வாக்குறுதி அளித்தார். அந்த  கிராமத்தில் உள்ள பள்ளிக்கும் குல்விந்தர் சிங் பெயர் சூட்டப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே பஞ்சாப் மாநில அரசின் சார்பில் ரூ.7 லட்சம் கருணைத்தொகையும், ரூ.5 லட்சம் மதிப்பிலான நிலமும் குல்விந்தர் சிங்கின் குடும்பத்தாருக்கு  அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: